புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய குர்மீத் சிங், "புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடப்பாண்டு முதல் தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட உள்ளது. தேசிய கல்விக்கொள்கையில் இளங்கலைப் படிப்பைப் படிக்கும் மாணவர்கள் அவர்கள் விருப்பப்படும் நேரத்தில் வெளியேறலாம். மாணவர்கள் ஒரு வருடம் கழித்துப் படிப்பை விட்டு வெளியேற விரும்பினால் சான்றிதழ் பெற அனுமதிக்கப்படுகிறது. பாதியில் படிப்பை நிறுத்தும் மாணவர்கள், தங்கள் விருப்பப்படி அல்லது வசதிக்கேற்ப ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் சிறிது காலம் கழித்து கல்விப் படிப்பைத் தொடரலாம். அகாடமிக் பாங்க் ஆஃப் கிரெடிட் போர்ட்டலில் (ஏபிசி) கணக்கு உருவாக்க மாணவர்களை இக்கல்விக்கொள்கை அனுமதித்துள்ளது.
இந்த ஏபிசி, மாணவர்களின் பாட விவரங்கள் மற்றும் தரம் தொடர்பான தகவல்களின் களஞ்சியமாகச் செயல்படும். ஒரு இடைவேளைக்குப் பிறகு கல்வி பயில விரும்பும் ஒரு மாணவர், பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் சேரும்போது அவர்கள் விட்ட இடத்திலிருந்து படிப்பைத் தொடரலாம். பல கல்வி நிறுவனங்கள் போர்ட்டலுடன் இணைக்கப்பட்டுள்ளன. மாணவர் இடைநிலைக் கல்வியின் போது வேறு பாடத்தை மேற்கொள்ள விருப்பம் இருந்தால் அதைத்தொடரலாம். இது பல்வேறு பாடங்களை ஆராய மாணவர்களை ஊக்குவிக்கும்.
புதிய கொள்கையானது தொழிற்கல்வியை பொதுக் கல்வியுடன் ஒருங்கிணைக்கிறது. அனைத்து துறைகளிலும் திறன்களை ஒருங்கிணைக்கிறது. தொழில்நுட்பம் மூலம் கற்றல், தொழில்முனைவு, தொடர்ச்சியான மதிப்பீடு, பிராந்திய மொழிகளில் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் பயிற்சி மற்றும் பயிற்சி மூலம் சோதனை கற்றல் ஆகியவற்றிற்கு உதவுகிறது.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை குறித்துக் கேட்கிறீர்கள். பல படிப்புகளில் சேர்க்கையில் கோட்டா முறை பின்பற்றப்படுகிறது. பாடப்பிரிவுகளிலும் இட ஒதுக்கீடு கொள்கை அமல்படுத்தப்படவில்லை. உண்மையில் உள்ளூர் மாணவர்களின் பிரதிநிதித்துவம் 35% முதல் 40% வரை உள்ளது. எனவே 25% என்று கட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை. எப்படி இருந்தாலும், உள்ளூர் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சகத்திடம் எடுத்துச் சென்றுள்ளோம். அவர்கள் அதைப் பரிசீலித்து வருகின்றனர்" என்றார்.