கர்நாடகாவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 224 தொகுதிகளில் பெரும்பான்மையாக 135 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதில், முதலமைச்சர் பதவிக்காக டி.கே.சிவகுமார், சித்தராமையா ஆகிய இருவருக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக, பெங்களூருவில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் பதவிக்கான அதிகாரத்தைக் கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் முதலமைச்சர் பதவி யாருக்கு என்பதை காங்கிரஸ் தலைமை அறிவிக்கவுள்ளது. பெரும்பான்மையாக எம்.எல்.ஏ.க்கள் சித்தராமையாவை ஆதரிப்பதாகக் கூறப்படுகிறது. அதே போல், லிங்காயத்து, ஒக்கலிகர் சமூகங்களைச் சேர்ந்த மடாதிபதிகள் டி.கே.சிவக்குமாருக்கு முதலமைச்சர் பதவியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, நேற்று சித்தராமையா தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவரது மகன் யதீந்திரா மற்றும் சில எம்.எல்.ஏ.க்களும் சென்றனர். காங்கிரஸ் தலைமை டி.கே.சிவகுமாருக்கு டெல்லி வர அழைப்பு விடுத்தும் அவர் நேற்று டெல்லி செல்லும் பயணத்தை ரத்து செய்தார்.
இதனையடுத்து பிரியங்கா காந்தி போனில் டி.கே.சிவகுமாருக்கு அழைப்பு விடுத்ததையடுத்து இன்று டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். இன்று பிற்பகல் அவர், காங்கிரஸ் கட்சித் தலைவர்களை சந்தித்துப் பேசவுள்ளதாகக் கூறப்படுகிறது.
டெல்லி செல்லும் முன் பெங்களூர் விமான நிலையத்தில் டி.கே.சிவகுமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், " காங்கிரஸ் கட்சி எனக்கு பலத்தை அளித்துள்ளது. நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம். யாரையும் முதுகில் குத்த மாட்டேன், மிரட்டவும் மாட்டேன்.135 எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். காங்கிரஸ் கட்சியில் பிளவை உண்டாக்க நான் விரும்பவில்லை" எனக் கூறினார்.