பீகார்: அக்காவுக்கு பார்த்த மாப்பிள்ளை, தங்கைக்கு கணவர் ஆனார் - என்ன நடந்தது?

இரு வீட்டார் சம்மதத்துடன் மணமகன் ராஜேஷ், தன் காதலி புதுலை திருமணம் செய்து கொண்டார்.
பீகார்: அக்காவுக்கு பார்த்த மாப்பிள்ளை, தங்கைக்கு கணவர் ஆனார் - என்ன நடந்தது?

கனமான மனநிலையில் வாழ்க்கையில் ஹீரோக்கள், ஹீரோயின்கள் எதிர்பாராத சூழ்நிலையில் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்களை திரைப்படங்களில் பார்த்திருப்போம். அதுபோன்ற ஒரு சம்பவம் பீகாரில் உள்ள சரண் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

பீகார் மாநிலம், சரண் மாவட்டத்தில் உள்ள சாப்ராவைச் சேர்ந்த ராஜேஷ் குமாருக்கு பிந்தோலி கிராமத்தைச் சேர்ந்த ரிங்கு குமாரிக்கு மே 2-ம் தேதி திருமணம் செய்ய பெரியோர்கள் முடிவு செய்துள்ளனர். மணமகன் மணமகளின் கழுத்தில் தாலி கட்ட ஊர்வலமாக அவரது கிராமத்தை அடைந்தார். பெண்ணின் தரப்பு அவரை கண்ணியத்துடன் எதிர்கொண்டது. மணமக்களுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு பாரம்பரிய பூஜைகள் செய்யப்பட்டன.

இரவு 11 மணியளவில் மணமகனின் போன் ஒலித்தது. மணப்பெண்ணின் சகோதரி புதுலிடமிருந்து அழைப்பு வந்தது. ’இந்தக் கல்யாணம் இப்படியே தொடர்ந்தால், நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்காவிட்டால், நான் இந்தக் கட்டிடத்திலிருந்து குதித்து செத்துடுவேன்’என்று அந்தப் பெண் மறுபக்கத்திலிருந்து அழுதுகொண்டே கூறியுள்ளார். ’அப்படியெல்லாம் செய்ய வேண்டாம் ’ எனக் கூறிய மணமகன் புதுலை தனிமையில் பேச அழைத்தார்.

இரவில் மணமகன் மணமகளின் சகோதரியுடன் தனிமையில் பேசுவதை உறவினர்கள் பார்த்துள்ளனர். இருவரும் திருமண மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது புதுல் மணமகனை தனக்கே திருமணம் செய்து வைக்க வேண்டும் என அடம்பிடித்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத புதுலின் அக்கா, தங்கையின் பிடிவாதத்தால் விட்டுக்கொடுக்க முன் வந்தார். ஆனால், மாப்பிள்ளை வீட்டார் இதற்கு சம்மதிக்கவில்லை.

இதனால் திருமணம் நிறுத்தப்பட்டது. இரு தரப்பினரும் விவாதித்துக் கொண்டனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, போலீசார் முன்னிலையில் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மணப்பெண்ணின் சகோதரி புதுல் மற்றும் மணமகன் ராஜேஷ் இருவரும் நீண்ட நாட்களாக காதலிப்பதாக அதன் பிறகே தெரிய வந்தது. அதைக் கேட்டு அனைவரும் வாயடைத்துப் போனார்கள்.

சாப்ராவில் உள்ள கல்லூரியில் இடைநிலைத் தேர்வு எழுதச் சென்றபோது புதுல், ராஜேஷை சந்தித்துள்ளார். அடிக்கடி சாப்ராவுக்குச் செல்லும் புத்தூல், ஒவ்வொரு முறையும் அங்கு ராஜேஷைச் சந்திப்பது வழக்கம். இந்த நிலையில், அவர்கள் ஒருவரையொருவர் காதலித்துள்ளனர். அடிக்கடி ஒன்றாகச் சுற்றுவது வழக்கம். போன் செய்து மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்துள்ளனர்.

இப்படி இவர்களது காதல் தொடர்ந்த நிலையில், ராஜேஷிற்கு பெரியவர்கள் திருமணம் செய்ய புதுலின் அக்காவை பெண் பார்த்துள்ளனர். தங்கள் காதலை எப்படி வெளிப்படுத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் திருமணம் என்ற தருணம் வந்தது. கடைசியில் இரு வீட்டார் சம்மதத்துடன் மணமகன் ராஜேஷ், தன் காதலி புதுலை திருமணம் செய்து கொண்டார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com