'2,000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் மாதம் வரை புழக்கத்தில் இருக்கும். எனவே, 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் அவசரம் காட்ட வேண்டாம்' என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
2,000 ரூபாய் நோட்டுகள் அக்டோபர் 1-ம் தேதி முதல் செல்லாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், தற்போது புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மேலும், டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப்டம்பர் 30-ம் தேதி வரை 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இதனிடையே, 2,000 ரூபாய் நோட்டுகளை விநியோம் செய்வதை உடனே நிறுத்த வேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், மக்கள் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அவசரம் காட்ட வேண்டாம் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகப் பேசிய அவர், 'பண நிர்வாகத்தின் ஒரு பகுதியாகவே 2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறப்படும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2,000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் மாதம் வரை புழக்கத்தில் இருக்கும்.
அதனால் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அவசரம் காட்டவேண்டாம். இன்னும் 4 மாதம் அவகாசம் உள்ளது. நோட்டுகளை மாற்ற வரும் மக்களுக்கு வசதியாக பந்தல்கள், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய உத்தரவிட்டுள்ளோம்.
வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் நோட்டுகளை மாற்றவும் உரிய ஏற்பாடுகள் செய்யப்படும்' என்றார்.