தெலங்கானா, ஐசா பகுதியில் தலையில் அடிப்பட்ட சிறுவனுக்கு தையல் போடாமல் ஃபெவிக்குவிக் தடவிய மருத்துவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் ரைச்சூர் மாவட்டத்தில் உள்ள லிங்கசூகூரைச் சேர்ந்த தம்பதி வம்சிகிருஷ்ணா மற்றும் சுனிதா. இவர்கள் தெலுங்கானா மாநிலம் அய்சாவில் நடந்த உறவினர் திருமணத்துக்கு சென்றுள்ளனர். அப்போது வம்சிகிருஷ்ணா - சுனிதா தம்பதியின் ஏழு வயது மகன் வெளியில் விளையாடி கொண்டிருந்தபோது கீழே விழுந்து தலையில் அடிபட்டுள்ளது.
உடனடியாக அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு சிறுவன் கொண்டு செல்லப்பட்டான். அங்கு காயத்துக்கு அவசர சிகிச்சை என்ற பெயரில் மருத்துவ உதவியாளர்கள் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். வீடு திரும்பிய பிறகு சிறுவனின் காயத்தை கவனித்த உறவினர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
ஆழமான காயத்திற்கு தையல் போடாமல் தனியார் மருத்துவமனை சிகிச்சை அளித்தது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. சில நாட்கள் கழித்து கட்டு பிரித்த பிறகே சிகிச்சையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சிறுவனின் காயத்தை உற்றுப்பார்த்த உறவினர் ஒருவர், ’நெற்றி காயத்தில் தையல் போடுவதற்கு பதிலாக, பொருட்களை ஒட்டுவதற்காக பயன்படுத்தப்படும் ‘ஃபெவிக்விக்’என்பதை பயன்படுத்தி இருப்பதை கண்டு பிடித்தார்.
இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சிறுவனுடன் தனியார் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர், ஊழியர்களுடன் தகராறு செய்தனர். மருத்துவர் அளித்த விளக்கத்தை கேட்காது தாங்கள் வாதம் செய்வதை வீடியோவாகவும் எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பினர்.
மருத்துவர் செயலால் அதிர்ந்து போன சிறுவனின் பெற்றோர் மருத்துவமனையில் வாக்குவாதம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்நிலையில், சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தனியார் மருத்துவமனைக்கு சீல் வைத்தனர்.