கர்நாடக மாநிலத்தில் கடந்த 10ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல், மாநிலம் முழுவதும் 36 மையங்களில் நடைபெற்றது.
மொத்தம் 224 தொகுதிகள் உள்ள கர்நாடகாவில் ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில் மாலை 4 மணி நிலவரப்படி காங்கிரஸ் 137 தொகுதிகள், பா.ஜ.க 63 தொகுதிகள், மதச்சார்பற்ற ஜனதா தளம் 20 தொகுதிகள் மற்றும் இதர கட்சிகள் 4 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.
பெரும்பான்மைக்கு போதுமான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளதால் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியில் கொண்டாட்டம் களைகட்டி உள்ளது. அதே நேரம் கர்நாடகாவில், ‘யாரை முதலமைச்சர் பதவியில் அமரச் செய்வது?’ என்கிற கேள்வியும் காங்கிரஸ் வட்டாரத்தில் எழுந்துள்ளதை பார்க்க முடிகிறது.
முதலமைச்சராக பதவியேற்க போவது முன்னாள் முதல்வரான சித்தராமையாவா? அல்லது கர்நாடகா மாநிலத்தில் பல்வேறு சோதனைகளை கடந்து காங்கிரஸ் கட்சியை கட்டிக்காத்த டி.கே.சிவகுமாரா? என, விவாதங்கள் எழ தொடங்கியுள்ளன.
டி.கே.சிவகுமாரை பொறுத்தவரை கனகபுரா தொகுதியில் இருந்து 8 முறை எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தனது தொகுதியில் மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலம் முழுவதும் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்து வருவதோடு தற்போது மாநிலத்தின் காங்கிரஸ் தலைவராகவும் உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் விசுவாசியாகவும், நெருக்கடி காலங்களில் தூணாகவும் இருந்து வருவதால், இன்றளவும் சி.பி.ஐ, அமலாக்கத்துறை தொடுத்த பல வழக்குகளை டி.கே.சிவகுமார் எதிர்கொள்கிறார். இந்த வழக்குகள் தொடர்பாக 104 நாட்கள் சிறையில் இருந்துள்ளார்.
முன்னாள் முதல்வர் சித்தராமையாவை பொறுத்தவரை எம்.எல்.ஏ-க்களை கையாளுவதில் தேர்ச்சி பெற்றவர் என்ற பேச்சும் உள்ளது. மைசூர் மாவட்டத்தில், சித்தராமணஹண்டி பகுதியை சேர்ந்த சித்தராமையா கடந்த 2013-2018 வரை தொடர்ந்து 5 ஆண்டுகள் இடையூறு இல்லாமல் ஆட்சி செய்தவர் என்ற பெருமைக்கு உரியவர்.
இந்த பரபரப்பான சூழலில் ‘கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்பார்’ என அவரது மகன் யதீந்திரா செய்தியாளர்களிடம் கூறினார். இதற்கு டி.கே.சிவக்குமார் ஆதரவாளர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் முதலமைச்சர் பதவியை விட்டுத்தர மாட்டோம் என்று அறிவித்துள்ள டி.கே.சிவக்குமார் தரப்பினர் கர்நாடக மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க டி.கே.சிவக்குமாருக்கு சோனியா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கேவின் ஆதரவு இருக்கிறது என்றும் கூறியுள்ளனர்.
இதற்கிடையே காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக்கொண்டு பெங்களூருவில் உள்ள ஹில்டன் ஓட்டலுக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வெற்றிப் பெற்ற வேட்பாளர்களை அழைத்துச் செல்ல ஹெலிகாப்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் சட்ட மன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற குழு தலைவரை அதாவது முதலமைச்சரை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக கர்நாடக காங்கிரஸ் வட்டாரத்தில் பதற்றமான சூழல் நிலவி வருவதோடு அரசியல் களத்திலும் அனல் வீசி வருகிறது.