யூ-டியூப் வீடியோக்களைப் பார்த்து கொள்ளை: தொழில் அதிபர் வீட்டில் அதிர வைத்த மாணவர்கள்

யூ-டியூப் வீடியோக்களைப் பார்த்து கொள்ளை: தொழில் அதிபர் வீட்டில் அதிர வைத்த மாணவர்கள்

யூ-டியூப் பார்த்து சமையல், யூடியூப் பார்த்து மருத்துவம், யூடியூப் பார்த்து மெக்கானிசம், யூடியூப் பார்த்து வேலை வாய்ப்பு என்கிற ரீதியில் யூடியூப் பார்த்துக் கொள்ளையடித்து அதிர வைத்திருக்கிறார்கள் மாணவர்.

மத்தியப்பிரதேசத்தில் இப்படியொரு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட பாலிடெக்னிக் மாணவர்கள் உட்பட 4 பேரைக் கைது செய்துள்ளது காவல்துறை.

தற்போதைய நவீன தொழில் நுட்பம் எந்தளவுக்குப் பயனுள்ளதோ அதே அளவிற்கு ஆபத்தும் நிறைந்தது என்பதை சத்தர்பூர் பகுதியில் உள்ள ஓம் பிரகாஷ் என்ற தொழில் அதிபர் வீட்டில் புகுந்து கொள்ளையடித்து நிரூபித்து இருக்கிறார்கள் அந்த 4 பேர். ஓம் பிரகாஷ் வீட்டிற்குள் நுழைந்த அவர்கள் அவரது மனைவி மற்றும் அவரது மகள் ஆகியோரையும் கட்டிப்போட்டுள்ளனர். அவர்களைத் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி அவர்களிடம் இருந்து லாக்கர் சாவியைப் பெற்றுள்ளனர். பீரோவிலிருந்த ஒரு கோடி மதிப்பிலான பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த போலீசார், பாலிடெக்னிக் மாணவர்கள் 3 பேர் உட்பட 4 பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 36 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க ஆபரணங்களைப் பறிமுதல் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் மாணவர்கள் யூடியூப் காணொளியைப் பார்த்துக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட ஓம் பிரகாஷ் கூறுகையில், ’’ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் நாங்கள் அனைவரும் இரவு உணவுக்குத் தயாராகிக் கொண்டிருந்தோம். அப்போது எனது மகள் கேட்டை மூட கீழே இறங்கினாள். ஏற்கனவே அங்கு மறைந்திருந்த மர்மநபர்கள் மகளின் தலையைச் சுவரில் தாக்கி அமைதியாக இருக்கும்படி மிரட்டியுள்ளனர். பின்னர் குற்றவாளிகள் எனது மகளின் கழுத்தில் கத்தியை வைத்தபடி வந்ததைப் பார்த்து நாங்கள் அமைதியானோம். அடுத்து என்னோடு மகளையும், மனைவியையும் கட்டி வைத்து வாயில் டேப் அடித்தனர். பீரோவிலிருந்த பணத்துடன் தங்கம், வெள்ளி நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றனர்’’என்கிறார் அதிர்ச்சியிலிருந்து மீளாமல்.

-மேனகா அஜய்

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com