சந்திரயான்- 3 வெற்றியை தொடர்ந்து நிலவுக்கு மனிதனை அனுப்புவதுதான் அடுத்தக் கட்ட திட்டமாக உள்ளது என பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
சந்திரயான்-3 லேண்டர் நிலவில் தரையிறங்கும் பணி மாலை முதலே தொடங்கி நடைபெற்றது. பின்னர் நிலவின் தென்பகுதியில் திட்டமிட்டப்படி மாலை 6.04 மணிக்கு லேண்டர் தரையிறங்கப்பட்டது.
இதன்மூலம் சந்திரயான்-3-ஐ வெற்றிகரமாக தரையிறக்கி நிலவில் கால் பதித்து வரலாற்று சாதனையை இந்தியா படைத்தது. இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை தொடர்ந்து நிலவில் இந்தியா கால் பதித்து சாதனை படைத்துள்ளது. இதைத்தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். சந்திரயான்-3 திட்டத்திற்காக உழைத்த அனைவரையும் பாராட்டுவதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார். தென்னாப்பிரிக்காவில் இருந்து காணொளி காட்சி மூலம் இணைந்த பிரதமர் மோடி தேசியக்கொடியை அசைத்து வாழ்த்து தெரிவித்தார்.பின்னர் பேசிய பிரதமர் மோடி, ”சந்திரயான் 3 மூலம் இந்தியா வரலாறு படைத்துள்ளது.புதிய இந்தியா உருவாகி உள்ளது.
இந்தியாவின் காலடி நிலவில் பதிந்திருப்பது ஒட்டுமொத்த நாட்டையும், உற்சாகமடைய வைத்துள்ளது.ஒவ்வொரு வீட்டிலும் பெருமிதம் பொங்குகிறது என பிரதமர் மோடி உருக்கமாக தெரிவித்தார். மேலும் சந்திரயான் 3-ஐ வெற்றிகரமாக தரையிறக்கி சரித்திர சாதனை படைத்த விஞ்ஞானிகளை பாராட்டுவதாக கூறினார்.
சந்திரயான் -3 திட்டத்தின் வெற்றி ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் கிடைத்த வெற்றியாகும்.நிலவுக்கு மனிதனை அனுப்புவது தான் அடுத்தக் கட்ட திட்டமாக உள்ளது. சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 விண்கலம் விரைவில் அனுப்பப்படும்” எனவும் தெரிவித்தார்.
சந்திரயான்-3 வெற்றிக்கு பல்வேறு தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ”நிலவில் தரையிறக்கிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.இச்சாதனையால் ஒட்டுமொத்த நாடும், புலம்பெயர் இந்தியர்களும் பெருமை கொள்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ”சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியதற்காக இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள். சந்திரயான்-3ன் வெற்றி இந்தியாவின் விண்வெளி ஆய்வில் மாபெரும் பாய்ச்சல்” எனவும் தெரிவித்துள்ளார்.
இதேபோல் ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, எடப்பாடி பழனிசாமி, வைரமுத்து உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சந்திரயான்-3 வெற்றியை நாடு முழுவதும் மக்கள் சாலைகளில் திரண்டு தேசியக்கொடியை அசைத்தப்படி கொண்டாடி மகிழ்ந்தனர்.