உலகமே உற்று நோக்கும் சந்திரயான்-3; வரலாறு படைக்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் உறுதி!

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், தேர்வு செய்யப்பட்ட இடத்தில் இன்று மாலை 5.44 மணிக்கு அதன் பயணத்தை தொடங்கும் என இஸ்ரோ அறிவிப்பு
சந்திரயான்-3
சந்திரயான்-3

நிலவில் தரையிறங்கி ஆராய்வதற்காக இஸ்ரோவால் நிலவுக்கு அனுப்பப்பட்டது தான் சந்திரயான்-3. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் ரூ.615 கோடியில் சந்திரயான் 3-ஐ உருவாக்கியிருக்கிறது. கடந்த ஜூலை 14ம் தேதி சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்டது. விண்கலம் தற்போது நிலவின் சுற்றுப்பாதையில் வலம் வருகிறது.

சந்திரயான்-3  புறப்படுவதற்கு முன்பு
சந்திரயான்-3 புறப்படுவதற்கு முன்பு

அதையடுத்து திட்டமிட்டப்படி விண்கலத்தில் உள்ள லேண்டர் கலன் இன்று மாலை சரியாக 5.44 மணிக்கு அதன் பயணத்தை தொடங்கும். நிலவில் மெல்ல மெல்ல தரையிறங்க ஆரம்பிக்கும். நிலவுக்கு அருகே லேண்டர் வந்ததும் அதன் வேகம் குறைக்கப்படும். இதற்கான பணியில் விஞ்ஞானிகள் மிகவும் கவனத்துடன் ஈடுபட்டுள்ளனர்.

இஸ்ரோ விஞ்ஞானிகள் லேண்டரை இறக்க நிலவின் தென்துருவப் பகுதியை தேர்வு செய்துள்ளனர். லேண்டரின் வேகம் பூஜ்ஜியத்தை எட்டியதும் இன்று மாலை 5.44 மணிக்கு மெதுவாக தரையிறங்கும். லேண்டர் தரையிறங்கிய மூன்று மணி நேரத்திற்கு பிறகு அதில் உள்ள ரோவர் வாகனம் வெளியே வந்து அதனுடைய ஆய்வினை தொடங்கும்.

நிலவை பற்றி ஆராய்வதற்கு புறப்பட்ட சந்திரயான்-3
நிலவை பற்றி ஆராய்வதற்கு புறப்பட்ட சந்திரயான்-3

சந்திரயான்-3 விண்கலத்தின் செயல்பாட்டுகளை இந்தியா மட்டுமல்ல உலகமே உற்றுநோக்கி கவனித்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் நிலவின் அதே தென்துருவ பகுதியில் ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் விழுந்து நொறுங்கியது. அதை தொடர்ந்து இந்தியா தற்போது அதே தென்துருவ பகுதியை தேர்வு செய்து லேண்டரை தரையிறக்க முடிவு செய்துள்ளது.

நிலவை சுற்றி வலம் வரும் சந்திரயான்-3
நிலவை சுற்றி வலம் வரும் சந்திரயான்-3

சந்திரயான்-2 விண்கலம் நிலவின் தரையிறங்கும் போது வேகமாக தரையிறங்கியதால் தான் லேண்டர் செயலிழந்தது. ஆனால் இம்முறை அதுபோல் நடைபெற வாய்ப்பு கிடையாது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஏனெனில் இந்த முறை லேண்டரின் கால்கள் வலுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேடு, பள்ளம் நிறைந்த நிலவில் சமதள பரப்பை கண்டறிந்து தரையிறங்க ஏதுவாக அதன் கால்களில் டெலஸ்கோப் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதனால் இம்முறை வெற்றி நிச்சயம் என்று உறுதி அளிக்கின்றனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்.

விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3
விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3

இம்முறை இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் வெற்றி பெற்றுவிட்டால் அது தெற்காசிய நாடுகளில் உள்ள விண்வெளித் துறையில் பெரும் மைல் கல்லாக அமையும். அது மட்டுமல்லாது எதிர்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com