ஆந்திராவில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் கிருஷ்ணகிரி, திருத்தணி, தர்மபுரி உள்ளிட்ட எல்லை பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த காலத்தில் புதிய நிறுவனங்களை அமைக்க அனுமதி கொடுப்பதற்கு சட்டவிரோதமாக ரூ.118 கோடி பெற்றதாக அவர் மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று அதிகாலை ஊழல் புகாரில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார். நந்தியாலா டிஐஜி தலைமையில் போலீஸார் அவரை கைது செய்தனர். சந்திரபாபு நாயுடுவை கைது செய்ய அவரது கட்சியினர் எதிர்பபு தெரிவித்தனர். மேலும் அவர் எஸ்பிஐி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படைப்பிரிவின் பாதுகாப்பில் உள்ளதால் சட்டப்படி அதிகாலை 5.30 மணிவரை அழைத்து செல்ல அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
அதை தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவை காலை 6 மணிக்கு கைது செய்தனர். இதையடுத்து ஆந்திரா மாநிலம் முழுவதும் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க போலீசார் பேருந்துகளை நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் பேருந்துகள் எல்லைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருத்தணி வழியாக திருப்பதிக்கு செல்லும் பேருந்துகள், திருத்தணி வரை மட்டும் இயக்கப்படுகிறது.
அதேபோல் தமிழகத்தில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, அரூர், மேட்டூர், ஈரோடு, ஓசூர் போன்ற பகுதிகளில் இருந்து நாள்தோறும் 50க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் வழியாக அண்டை மாநிலமான ஆந்திராவுக்கு இயக்கப்படுகிறது. குப்பம், சித்தூர், பலமனேரி, திருப்பதி ஆகிய இடங்களுக்கும் பேருந்துகள் செல்கின்றன.
இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது நடவடிக்கையால் தமிழகத்தில் இருந்து கிருஷ்ணகிரி- ஓசூர் வழியாக இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து அரசு பேருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட்டு உள்ள நிலையில், ஒரு சில தனியார் பேருந்துகள் மட்டும் ஆந்திரா- தமிழகம் எல்லையான காளி கோயில் வரை இயக்கப்படுகிறது.
இதனால், ஆந்திரா தமிழகம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளதால் பேருந்து பயணிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.அன்றாட பணி நிமித்தமாக செல்பவர்களும் கோவிலுக்கு செல்பவர்களும் கிருஷ்ணகிரி வரை வருகை தந்து, பின்னர் ஏமாற்றத்துடன் மாற்று பேருந்தில் தங்கள் வீடுகளுக்கு திரும்புகின்றனர்.மாநில எல்லையில் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளது. பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.