'என் மனைவியை மீட்டு தாருங்கள்' - பிரதமர் மோடிக்கு பாகிஸ்தானியர் கோரிக்கை

சொந்த ஊரிலிருந்த தன்னுடைய சொந்த நிலத்தை 12 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு தன்னுடைய 4 குழந்தைகளுடன் நேபாளம் வழியாக மே மாதம் 13-ம் தேதி சட்ட விரோதமாக இந்தியாவுக்கு வந்துள்ளார்.
சீமா ஹைதர் & சச்சின் மீனா
சீமா ஹைதர் & சச்சின் மீனா

தன்னுடைய மனைவியை மீட்டுத் தரக் கோரி பிரதமரிடம் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணம் அருகே உள்ள கைராப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் குலாம் ஹைதர். இவரது மனைவி சீமா ஹைதர். இவர்களுக்குத் திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர்.

குலாம் ஹைதர் தற்போது சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சீமாஹைதர் பாகிஸ்தானில் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்தநிலையில் சீமா ஹைதர் தன்னுடைய செல்போனில் பப்ஜி கேம் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த கேமின் மூலம் நொய்டாவைச் சேர்ந்த சச்சின் மீனா என்ற இளைஞர் அறிமுகமாகியுள்ளார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்கத் தொடங்கியுள்ளனர்.

இதனைத்தொடந்து சச்சின் மீனாவுடன் சேர்ந்து வாழ்வதற்கு சீமா ஹைதர் முடிவு செய்துள்ளார். பின்னர் சொந்த ஊரிலிருந்த தன்னுடைய சொந்த நிலத்தை 12 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு தன்னுடைய 4 குழந்தைகளுடன் நேபாளம் வழியாக மே மாதம் 13ம் தேதி சட்ட விரோதமாக இந்தியாவுக்கு வந்துள்ளார்.

பின்னர் அவர்கள் இருவரும் கிரேட்டர் நொய்டாவில் வாடகை வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். சட்டவிரோதமாக சீமா ஹைதர் குடும்பம் நடத்திய சம்பவம் வெளியில் கசிந்ததால் சீமா ஹைதர், சச்சின் மீனா இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து இருவரும் நொய்டாவில் உள்ள ரபுபுரா என்ற பகுதியில் வீட்டுக்கு கடந்த சனிக்கிழமை அன்று சென்றனர்.

இந்நிலையில் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வரும் சீமா ஹைதர் கணவரான குலாம் ஹைதர் தன்னுடைய மனைவியை மீட்டு பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com