ராகுல் காந்தியை தொடர்ந்து சோனியா காந்திக்கும் சிக்கல்? : தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க புகார்

சோனியா காந்தி மீதும் வழக்குத் தொடர பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ராகுல் காந்தியை தொடர்ந்து சோனியா காந்திக்கும் சிக்கல்? : தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க புகார்

பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாக குற்றம்சாட்டி பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து கர்நாடகத்தைப் பிரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வெளிப்படையாக வக்காலத்து வாங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டிய நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பாஜக புகார் அளித்துள்ளது.

கர்நாடக தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைய உள்ளதால் கர்நாடக தேர்தல் பிரச்சாரக் களம் சூடு பிடித்துள்ளது. கடந்த இரண்டு மூன்று நாட்களாக காங்கிரஸ் மற்றும் பாஜகவை சேர்ந்த தலைவர்கள் மாநாடு, சாலை பேரணி என அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு இருந்தனர்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கர்நாடக மக்களுக்கு தனது கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக அனுப்பியுள்ள தகவலில் கர்நாடகாவின் நற்பெயர், ஆளுமை மற்றும் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் யாரையும் காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது. இது 6.5கோடி கன்னட மக்களுக்கு சோனியா காந்தி அனுப்பும் உறுதியான தகவல் என அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் சோனியா காந்தி வெளியிட்டுள்ள இந்தப் பதிவு பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் உள்ளதாகவும் இறையாண்மை என்பது ஒரு தனி நாட்டைக் குறிக்கும் என்றும், ஆனால் கர்நாடகாவில் அதுபோன்று எந்த விசயங்களும் இல்லாத சூழலில் சோனியா காந்தி மக்களிடையே பிரிவினை வாதத்தை தூண்ட முயற்சிப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் கர்நாடக மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்தப் புகாரில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மைசூரு மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, "துக்டே-துக்டே கும்பலின்" நோய் காங்கிரஸின் உயர்மட்டத்தை எட்டியுள்ளதாக குற்றம் சாட்டினார்.

"இந்தியாவின் நலன்களுக்கு எதிராக செயல்படும் போது, காங்கிரஸின் 'அரச குடும்பம்' முன்னணியில் இருக்கும். நான் இங்கு ஒரு தீவிரமான விஷயத்தைப் பற்றி பேச விரும்புகிறேன். என் இதயத்தில் நிறைய வலி இருப்பதால் அதைச் சொல்ல விரும்புகிறேன். இதுபோன்ற விளையாட்டை ஒருபோதும் மன்னிக்க முடியாது. இந்த குடும்பம் நாட்டின் அரசியலில் செல்வாக்கு செலுத்த வெளிநாட்டு சக்திகளை தலையிட ஊக்குவிக்கிறது.

இந்தியாவை வெறுக்கும் வெளிநாட்டு தூதர்களை காங்கிரஸ் ரகசியமாக சந்தித்து, இந்தியாவின் இறையாண்மையை அவமதிக்கும் செயல்களில் மீண்டும் மீண்டும் ஈடுபட்டு வருகிறது. அதற்காக அவர்கள் வெட்கப்படவில்லை’’என்று பிரதமர் குற்றம் சாட்டினார்.

இதற்கு முன்பு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல்காந்தி, மோடி சமுதாயத்தை தவறாக பேசிவிட்டார் என்று அவர் மீது வழக்குத் தொடர்ந்தனர். அதில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பரிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது சோனியா காந்தி மீதும் வழக்குத் தொடர பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com