பதஞ்சலி தயாரிப்பில் பல் பராமரிப்பிற்காக விற்பனை செய்யப்படும் ’திவ்யா தந்த் மஞ்சன்’-ல் தயாரிப்பு மூலப்பொருளாக அசைவப் பொருளைப் பயன்படுத்தியதாகக் பதஞ்சலி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
யோகா மற்றும் ஆயுர்வேதத்தை முன்வைத்து புகழடைந்தவர் பாபா ராம்தேவ். இவரது தலைமையில் இயங்கிவரும் பதஞ்சலி நிறுவனம், பல்வேறு வகையிலான உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் அன்றாட நுகர்வு பொருட்களை தயாரித்து சந்தைபடுத்தி வருகிறது. ஆங்கில மற்றும் வெளிநாட்டு பொருட்களுக்கு மாற்றான, பாரம்பரியம் மற்றும் ஆயுர்வேத அடிப்படையிலானவை என்று பதஞ்சலியின் பொருட்கள் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன. இதனை ஆயுர்வேதிக் என நம்பி மக்கள் பலர் வாங்குகிறார்கள்.
இந்நிலையில் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு டெல்லியைச் சேர்ந்த சட்ட நிறுவனம் ஒன்று சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் ஆயுர்வேதிக் என அடையாளப்படுத்தப்படும் பதஞ்சலியின் ’திவ்யா தந்த் மஞ்சன்’தயாரிப்பில் அசைவ மூலப்பொருட்களை உபயோகிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
’திவ்யா தந்த் மஞ்சன்’ என்பது பதஞ்சலியின் ஒரு பல் பராமரிப்பு விற்பனை பொருள். இதை பலரும் வாங்கி பயன்படுத்துகிறார்கள். இந்த ’திவ்யா தந்த் மஞ்சன்’ பற்பொடி தயாரிப்பில் ’சமுத்ரா ஃபென்’என்ற கட்ஃபிஷின் எலும்பு மூலப்பொருளாக பயன்படுத்தப்படுவதாக அதன் லேபிள் வாயிலாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக அனுப்பப்பட்ட நோட்டீஸை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த ஷாஷா ஜெயின், ”சைவப் பொருளாக மார்க்கெட்டிங் செய்து விற்கும் போது, திவ்ய தந்த் மஞ்சனில் அசைவப் பொருளான ’சமுத்ரா ஃபென்’பயன்படுத்தப்படுவது நுகர்வோர் உரிமைகள் மற்றும் குறிப்பிட்ட வகைப் பொருட்களுக்கான லேபிளிங் விதிமுறைகளை மீறுவதாகும்” என நோட்டீஸில் தெரிவித்துள்ளார்.
"எனது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், சக பணியாளர்கள் மற்றும் நண்பர்கள் சிலர் உங்கள் திவ்யா தந்த் மஞ்சனைப் பயன்படுத்துகின்றனர், மேலும் ’சமுத்ரா ஃபென்’தயாரிப்பின் ஏமாற்றுப் பயன்பாட்டைப் பற்றி அறிந்தபோது அவர்களின் மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டன, நானே உங்கள் நிறுவனத்தின் பல தயாரிப்புகளைப் பயன்படுத்துபவன், ஆனால் இப்போது, பதஞ்சலி தயாரிப்புகளைப் பயன்படுத்தத் தயங்குகிறேன், குறைந்தபட்சம் இந்த விஷயத்தில் உங்கள் தரப்பிலிருந்து தெளிவுபடுத்தும் வரை," எனவும் தெரிவித்துள்ளார்.
மே 11 அன்று வெளியிடப்பட்ட நோட்டீஸில், நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களுக்குள் நிறுவனம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், தவறினால் அந்த நிறுவனத்திற்கு எதிராக அதிகாரிகள் முன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.