ஆந்திராவில் தனது தந்தை அடிக்கடி குடித்து வந்து தனது தாயை அடிப்பதாக 9 வயது சிறுவன் தனது தந்தை மேல் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் இஸ்லாம் பேட்டை கிராமத்தை சேர்ந்த சுபானி. இவரது மனைவி சுபாம்பி. இவர்களுக்கு ரஹீம் என்ற 9 வயது மகன் உள்ளார். இந்நிலையில் சுபானி அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத 9 வயது மகன் ரஹீம் காவல்நிலையத்திற்கு சென்று வாய்மொழியாக தன் தந்தை மீது புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில், தன்னுடைய தந்தை தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதாகவும், வீட்டில் தனது தாயை அடித்து துன்புறுத்துவதாகவும் கூறியுள்ளார். ”அடிக்க வேண்டாம் என்று என் தாய் கெஞ்சினாலும் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து அடிக்கிறார். இதனால் எனது தந்தை மீது நடவடிக்கை எடுங்கள்” என சிறுவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். உடனடியாக அவரது வீட்டிற்கு சென்ற எஸ்.ஐ. தாய் மற்றும் தந்தை இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து சுபானியை கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தார்.