டெல்லியில் இருந்து கத்ரா இடையேயான தேசிய நெடுஞ்சாலை சுமார் ரூ.39,500 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட இருக்கிறது. இந்த நெடுஞ்சாலை பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் விவாசாயிகள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் இழப்பீடு வழங்கும் முன்பே நிலம் கையகப்படுத்தப்பட்டதாகவும், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கும் வரையில் ஒரு அங்குலம் நிலத்தைக்கூட அரசு, அரசு சாரா நிறுவனங்களை பறிக்க அனுமதிக்கமாட்டோம் என்று விவசாயிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண் விவசாயியை பஞ்சாப் போலீஸ் அதிகாரி ஒருவர் கன்னத்தில் அறைந்துள்ளார்.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் பெண் விவசாயியை கன்னத்தில் அறைந்த போலீஸ் அதிகாரி மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக எஸ்.எஸ்.பி கூறியுள்ளார். போலீஸ் அதிகாரி பெண் விவசாயியை கன்னத்தில் அறைந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.