இனி டாக்டர்கள், சுகாதார பணியாளர்களைத் தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை - புதிய சட்டதிருத்தம் அமல்

1.கொலைசெய்யப்பட்ட வந்தனா தாஸ், 2.பினராயி விஜயன்
1.கொலைசெய்யப்பட்ட வந்தனா தாஸ், 2.பினராயி விஜயன்

கேரளா மருத்துவனையில் சிகிச்சைக்கு வந்தவரால் மருத்துவர் வந்தனா தாஸ் கொல்லப்பட்டதையடுத்து, டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவமனை ஊழியர்களுக்கு காயம் ஏற்படும் வகையில் தாக்குதல் நடத்துவோருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்ற புதிய சட்டதிருத்தத்திற்கு நேற்று கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கேரளாவில் , கொல்லம் மாவட்டம் கொட்டகாராவில் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த இளம் மருத்துவரான வந்தனா தாஸ் (22) , அங்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட சந்தீப் என்ற கைதிக்கு சிகிச்சை அளிஒத்துக் கொண்டிருந்த போது கத்திரிக்கோலால் குத்தி கொல்லப்பட்டார். அதோடு அருகிலிருந்த போலீசார் மற்றும் சுகாதார பணியாளர்கள் கைதியால் தாக்கப்பட்டனர். இதனை கண்டித்து மருத்துவர்கள் பலர் 2 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி இந்திய மருத்துவ சங்கம் கண்டனம் தெரிவித்தது.

இந்த விவகாரத்தை தாமாக முன்வைத்து விசாரித்த கேரளா உயர்நீதிமன்றம், ஆளும் பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்கு கண்டன கேள்விகள் பல எழுப்பியது. மருத்துவ துறையில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கான புதிய நெறிமுறைகளை வகுக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் கேரள அரசின் உயர்மட்ட குழு கூட்டம் நேற்று கூடியது. அப்போது கேரள சுகாதார சேவை பணியாளர்கள் மற்றும் சுகாதார நிறுவனங்கள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு அமைச்சரவை குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த புதிய சட்ட திருத்தம் நடைமுறைக்கு வந்தால் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவமனை சொத்துகளுக்கு சேதம் விளைவிப்போருக்கு, குற்றத்தின் தன்மையை பொறுத்து ஓராண்டு முதல் 7 ஆண்டுகள் வரை தண்டனையும் 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை அபராதமும் விதிக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது.

மேலும் வழக்கு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 60 நட்களுக்குள் போலீஸ் விசாரணை முடிக்க வேண்டும் எனவும் மாவட்டந்தோறும் சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணையை விரைந்து முடிக்கவும் இப்புதிய சட்டம் வழி செய்கிறது. இந்த அவசர சட்டம் கேரள ஆளுநரின் ஒப்புதலுக்கு பின் நடைமுறைக்கு வரும்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com