திட்டம்-75ன் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி கப்பலான ‘வாக்ஷீர்’, அடுத்த ஆண்டு இந்திய கடற்படையில் இணைய உள்ள நிலையில், கடல்வழி ஒத்திகை சோதனை துவங்கியுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ல் ஒன்றிய அரசுக்கு சொந்தமான மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்திலிருந்து இந்த ‘வாக்ஷீர்’ நீர்மூழ்கிக் கப்பல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கான ஒத்திகைகள் வெற்றிகரமாக நிறைவடைந்த பிறகு, 2024-ஆம் ஆண்டின் துவக்கத்தில் இந்திய கடற்படையிடம் இந்த நீர்மூழ்கி கப்பல் ஒப்படைக்கப்பட உள்ளது.
கல்வாரி வகை நீர்மூழ்கி கப்பல் திட்டம் 75ன் கீழ் ஆறு நீர்மூழ்கி கப்பல்களை கடற்படையில் இணைப்பதற்கு இந்திய அரசால் திட்டமிடப்பட்டது. இதன் கீழ் 24 மாதங்களில் மூன்று நீர்மூழ்கிக் கப்பல்களை மசகான் கப்பல் கட்டும் நிறுவனம் கட்டியுள்ளது. அதனை இந்திய கடற்படையிடம் ஒப்படைத்துள்ள நிலையில், ஆறாவது நீர்மூழ்கி கப்பலான ‘வாக்ஷீர்’-ன் ஒத்திகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. முதல் வாக்ஷீர் நீர்மூழ்கி கப்பல் கடந்த 1974ம் ஆண்டு கடற்படையில் இணைக்கப்பட்டது. பின்னர் 1997ம் ஆண்டு கடற்படை பணியில் இருந்து விடுவிக்கப்பட்டது. இந்த 6வது நீர்மூழ்கி கப்பலான வாக்ஷீர் அதன் முந்தைய ரகத்தின் சமீபத்திய நவீனமயமாகும்.
இந்த ‘வாக்ஷீர்’ மின்சாரம் மற்றும் டீசலில் இயங்கும். இதற்கான ஒத்திகையின் போது கப்பலின் உந்துவிசை அமைப்புகள், ஆயுதங்கள், சென்சார் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்ததான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். விரிவான மற்றும் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, போரிடுவதற்கு ஏற்ப முழுமையான தகுதி வாய்ந்தது என்பது உறுதி செய்யப்படும். பின் இந்திய கடற்படையில் சேர்க்கப்படும்.