அவதூறு வழக்கில் சிறை: குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு - எப்போது விசாரணை?
அவதூறு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ளார்.
கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது ‘மோடி’ என்ற பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக குஜராத் பா.ஜ.க எம்.எல்.ஏ புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த மார்ச் 23ம் தேதி ராகுல் காந்தி குற்றவாளி என அறிவித்தது.
மேலும் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. இதையடுத்து ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி இழந்ததாக மக்களவைச் செயலகம் அறிவித்தது. இந்நிலையில் கடந்த 3ம் தேதி, குஜராத் மாநிலம் சூரத் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
அப்போது தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ஒரு மனுவும், குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி மற்றொரு மனுவை தாக்கல் செய்தார். இந்த 2 மனுக்களை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி ஆர்.பி.மொகேரா, ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கினார். மேலும் ராகுல் குற்றவாளி என்று அறிவித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரும் மனு மீது பதில் அளிக்க புர்னேஷ் மோடி மற்றும் குஜராத் மாநில அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு கடந்த 20ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அவரது மனுவை விசாரித்த நீதிபதி, ராகுல் காந்தியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் அவதூறு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு இந்த வாரமே விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.