பிரதமர் மோடியை கிறிஸ்தவ பேராயர்கள் அடுத்தடுத்து சந்தித்து பேசியிருப்பது கேரள மாநில அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
கேரளாவில் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை முதல் வந்தே பாரத் ரயில் சேவையை இன்று திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முன்னதாக நேற்று மாலை கொச்சி நகருக்கு வருகை புரிந்த பிரதமர் மோடி பா.ஜ.க இளைஞரணி சார்பில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டார்.
ஐ.என்.எஸ் கருடா கடற்படை விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடம் வரையிலும் 2 கி.மீ தூரத்துக்கு சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க-வினரை நோக்கி பிரதமர் மோடி உற்சாகமாக கை அசைத்தார்.
இதைத் தொடர்ந்து கேரளாவை சேர்ந்த கிறிஸ்தவ பேராயர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். குறிப்பாக, சீரோ மலபார் தேவாலய பேராயர் கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி, ஆர்த்தடாக்ஸ் ஆலய பேராயர் பசலியோ மார்தோமா மாத்யூ ஆகியோர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர்.
மேலும் யாக்கோ பைட் சிரியன் ஆலய பேராயர் ஜோசப் கிரிகோரியஸ், கோட்டயம் கினாயா கத்தோலிக்க தேவாலயம் ஆயர் மேத்யூ முல்லக்காடு, கால்டியன் ஆலயம் ஆயர் யூஜின் குரிய கோஸ், சீரோ மலங்கரா சபை கார்டினல் கிளிமீஸ், லத்தீன் சர்ச் பேராயர் ஜோசப் காளத்திபரம்பில், சிரியன் சர்ச் ஆப் கானான் ஆயர் குரியகோஸ் சேவரியாஸ் ஆகியோரும் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர்.
கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி புத்தாண்டு தினமான விஷூ தினத்தை முன்னிட்டு கேரளாவில் உள்ள பா.ஜ.க தலைவர்கள் கத்தோலிக்க பேராயர்கள் மற்றும் பிற தேவாலய தலைவர்களுக்கு காலை உணவு அளித்தனர். முன்னதாக ஈஸ்டர் அன்று கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கும், ரம்ஜான் அன்று இஸ்லாமியர்களின் வீடுகளுக்கும் சென்ற பா.ஜ.க தலைவர்கள் பிரதமர் மோடியின் ஈஸ்டர் வாழ்த்துகள் மற்றும் ரம்ஜான் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டனர்.
சமீபத்தில் கேரளாவை சேர்ந்த கிறிஸ்தவ பேராயர் ஒருவர், ‘ரப்பர் விவசாயிகளுக்கு தேவையானத் திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றினால் கிறிஸ்தவர்கள் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்றும், நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தனது கணக்கை கேரளாவில் தொடங்கும் நிலை ஏற்படும் என்றும் கூறியிருந்தார்.
அதேப்போல் மற்றொரு பேராயர் ‘பா.ஜ.க ஒன்றும் தீண்டத்தகாத கட்சி இல்லை’ என கூறியிருந்தார். இந்த பரபரப்பான சூழலில் பிரதமர் மோடியை கிறிஸ்துவ பேராயர்கள் அடுத்தடுத்து சந்தித்து பேசி இருப்பது கேரள மாநில அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.