சத்யபால் மாலிக் மீது சி.பி.ஐ. இரு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் ஊழல் புகாரில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அப்படி யாரையும் நாங்கள் கைது செய்யவில்லை என டெல்லி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
ஜம்மு - காஷ்மீர் முன்னாள் ஆளுநராக பதவியில் இருந்தவர் சத்யபால் மாலிக். இவர் பதவியில் இருந்த போது, கிரு நீர்மின் திட்டத்தில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களுக்கு 2,200 கோடி ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இந்த திட்டம் நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது, கிரு நீர்மின் திட்டத்தில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களுக்கு 2,200 கோடி ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு செய்யும் திட்டத்தில் மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, சத்யபால் மாலிக் மீது சி.பி.ஐ. இரு வழக்குகளைப் பதிவு செய்தது.
இந்த வழக்கு தொடர்பாக ஜம்மு - காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. இது குறித்து விளக்கம் அளித்த சத்யபால் மாலிக், காப்பீடு வழக்கில் சி.பி.ஐ. சில விளக்கங்களைக் கேட்டுள்ளதாகவும், அதுகுறித்து தான் பதிலளிப்பேன் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், டெல்லி ஆர்.கே புறத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு சத்யபால் மாலிக் வந்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவல் போலியானது. அப்படி யாரையும் கைது செய்யவில்லை என டெல்லி போலிசார் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.