கேரளாவில் 30 அடி பள்ளத்தில் தமிழக பேருந்து கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் போடிமெட்டு அருகே கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் தொண்டிமலை அருகே வந்து கொண்டிருந்த தமிழகத்தை சேர்ந்த ஒரு பேருந்து திடீரென நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த 30 அடி பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் திருநெல்வேலியை சேர்ந்த பெருமாள் (59), வள்ளியம்மாள் (70) மற்றும் சுசீந்திரன் (8) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயமடைந்த நிலையில் அனைவரையும் மீட்டு, அடிமாலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களில் 6 பேர் ஆபத்தான நிலையில் தேனி கானா விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலியில் இருந்து மூணாறு அருகில் உள்ள லட்சுமி எஸ்டேட்டுக்கு திருமணத்திற்காக வந்தவர்கள் விபத்தில் சிக்கியது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.