போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் தடியடி, கண்ணீர் புகைகுண்டுகளை வீசி விரட்டி அடித்தனர்
மேற்கு வங்க மாநிலத்தில் 10-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
மேற்கு வங்க மாநிலம், தினஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி கடந்த வியாழக்கிழமை அன்று அருகில் உள்ள பகுதியில் டியூசன் சென்றுள்ளார். ஆனால், டியூசன் சென்ற அந்த மாணவி நீண்ட நேரம் திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் சிறுமியை தேடி உள்ளனர். ஆனாலும் மாணவி கிடைக்காததால் காவல் நிலையத்தில் சிறுமி காணவில்லை எனப் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அன்று கலியகஞ்சி என்ற பகுதியில் உள்ள குளத்தின் அருகே சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அப்போது சிறுமி அணிந்திருந்த துணிகள் கிழிக்கப்பட்டிருந்துள்ளது.
இதையடுத்து சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாகப் பெற்றோர் தரப்பில் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் அதேப்பகுதியை சேர்ந்த ஜாவித் அக்தர் என்ற நபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகச் சிறுமியின் பெற்றோர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறியுள்ளனர்.
அதே சமயம் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று போலீஸ் தரப்பில் இதுவரையில் உறுதிப்படுத்தவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக தேசிய குழந்தைகள் நல ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ளது.
இதனிடையே இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி பிரேதப் பரிசோதனைக்குச் சிறுமியின் உடலை தர மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையின் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் தடியடி, கண்ணீர் புகைகுண்டுகளை வீசி விரட்டி அடித்தனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த தடியடி சம்பவத்திற்கு அம்மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.