கொரோனா உயிரிழப்பைக் குறைத்த இந்திய உணவுகள் எது தெரியுமா? - ஐ.சி.எம்.ஆர் ஆய்வில் தகவல்

கொரோனா உயிரிழப்பைக் குறைத்த இந்திய உணவுகள் எது தெரியுமா? - ஐ.சி.எம்.ஆர் ஆய்வில் தகவல்
கொரோனா உயிரிழப்பைக் குறைத்த இந்திய உணவுகள் எது தெரியுமா? - ஐ.சி.எம்.ஆர் ஆய்வில் தகவல்

கொரோனா உயிரிழப்பைக் குறைக்கும் இந்திய உணவுகள் குறித்து ஐ.சி.எம்.ஆர் ஆய்வறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.

இட்லி, தேநீர், மஞ்சள் போன்ற இந்திய பாரம்பரிய உணவு வகைகளால்தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் உயிரிழப்பு வெகுவாகக் குறைந்தது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ம் ஆண்டு உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகத்தையே புரட்டிப் போடச் செய்தது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 68.58 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 

மிகவும் அதிகபட்சமாக அமெரிக்காவில் 11.5 லட்சம் பேரும், இந்தியாவில் 5.31 லட்சம் பேரும் உயிரிழந்துள்ளனர். உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்தபோதும் இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு குறைவாகவே இருக்கிறது. 

இதுதொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஆய்வு மேற்கொண்டது. ஐ.சி.எம்.ஆர் முன்னாள் தலைவர் நிர்மல்குமார் கங்குலி தலைமையில் சுவிட்சர்லாந்து, பிரேசில், சவுதி அரேபியா, ஜோர்டான் நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வுகளை நடத்தினர். அவர்களின் ஆய்வறிக்கை மருத்துவ இதழில் அண்மையில் வெளியானது. 

அதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தொகை மிகக்குறைவு. ஆனால் அந்த நாடுகளில் கொரோனா தொற்றால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டது. மக்கள் தொகை அதிகமாக இருந்தபோதும் கொரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்பு இந்தியாவில் மட்டும் மிகவும் குறைவாக இருக்கிறது. 

இதற்கு இந்தியர்களின் உணவுப் பழக்க வழக்கங்களே முக்கிய காரணம். இந்தியர்களைவிட 20 மடங்கு அதிகமாக இறைச்சியை,  மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்கள் சாப்பிடுகின்றனர். பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், மீன், பால் பொருட்கள், மதுபானம் ஆகியவற்றையும் நம் இந்தியர்களைவிட அதிகமாக  மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள் உட்கொள்கின்றனர்.

ஆனால் இந்தியர்கள், மேற்கத்திய மக்களைவிட 4 மடங்கு அதிகமாக காய்கனிகளை சாப்பிடுகின்றனர். நாளொன்றுக்கு 1.2 கிராம் அளவுக்கு தேநீர் குடிக்கின்றனர். 2.5 கிராம் அளவுக்கு மஞ்சளை உணவு வகைகளில் சேர்க்கின்றனர். இந்தியர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கு இதுதான் முக்கிய காரணம் ஆகியிருக்கிறது. 

நம் நாட்டில் மக்கள் இட்லி, சாம்பாரையும், வடஇந்திய மக்கள் ராஜ்மா அரிசி சாதத்தையும் விரும்பி சாப்பிடுகின்றனர். இத்தகைய உணவு வகைகளால் இந்தியர்களின் ரத்தத்தில் இரும்பு, ஜிங்க் சத்து அதிகரிக்கிறது. சுருக்கமாக சொல்வதென்றால் இந்தியர்களின் உணவுப் பழக்க வழக்கத்தால் எதிர்ப்பு சக்தி அதிகரித்து கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு வெகுவாக குறைந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com