திருவனந்தபுரத்தில் "வந்தே பாரத்" ரயில் சேவையைத் தொடங்கி வைக்க உள்ளார்.
கேரளா வருகை தரும் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி, வரும் 24 மற்றும் 25ம் தேதிகளில் கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மத்திய பிரதேசத்திலிருந்து 24ம் தேதி தனி விமானம் மூலம் கொச்சி வருகிறார். அங்கு மாலை நேரத்தில் கொச்சி கப்பல் தளத்தில் நடைபெறும் ரோட் ஷோ நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.
இதனைத்தொடர்ந்து, தேவார கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டத்தில் பேசுகிறார். மறுநாள் திருவனந்தபுரத்தில் "வந்தே பாரத்" ரயில் சேவையைத் தொடங்கி வைக்க உள்ளார். இதன் பின்னர், மாலையில் பா.ஜ.க மூத்த தலைவர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் கட்சி வளர்ச்சி மற்றும் மாநில வளர்ச்சி குறித்து உரையாடுகிறார். இரவு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
இந்த நிலையில் கேரளா வரும் பிரதமர் மோடிக்கு மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஜோசப் ஜான் என்பவர் பெயரில், பா.ஜ.க மாநிலக் குழு அலுவலகத்துக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் உளவுத்துறை ஏ.டி.ஜி.பி-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.