நாம் பசியோடு இருக்கும்போதுதான், மற்றவர்கள் பசியை அறிந்து உதவி செய்ய முடியும்
விரதம் மேற்கொள்வது இறை நெறிக்கு மட்டுமல்ல, உடல் நலத்திற்கும் உகந்தது எனப் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் இஸ்லாமிய பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொழுகை செய்து நோன்பு திறந்தனர்.
இசுலாமியர்களைக் கௌரவிக்கும் விதமாக ‘இப்தார்’ நோன்பு திறப்பு நிகழ்ச்சி துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர். இதில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள், சட்டப்பேரவை துணைத் தலைவர் ராஜவேலு, சட்டமன்ற உறுப்பினர்கள், வக்பு வாரிய உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
மேலும் இசுலாமிய மதகுரு ‘இமாம்’. புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 300-க்கும் மேற்பட்ட குருமார்கள், தலைவர்கள், இஸ்லாமியர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தொழுகை மேற்கொண்டு நோன்பு திறப்பு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.
நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்றுப் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், ‘விரதம் மேற்கொள்வது இறைநெறிக்கு மட்டுமல்ல, உடல் நலத்திற்கும் உகந்தது என்றும், உபவாசம் இருப்பது நம்முடைய நம்பிக்கையாக இருக்கிறது.
நாம் உபவாசம் இருந்து மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் நாம் பசியோடு இருக்கும்போது தான் மற்றவர்கள் பசியை அறிந்து உதவி செய்ய முடியும்’ என்றார். மேலும் சகோதரத்துவத்தோடு நாம் அனைவரும் இணைந்து இந்த நிகழ்ச்சியை கொண்டாடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்’ எனப் பேசினார்.