துணை ராணுவப்படையில் உள்ளூர் இளைஞர்கள் இடம் பெறுவார்கள்
மத்திய அமைச்சர் அமித் ஷா, 13 மாநில மொழிகளில் சி.ஏ.பி.எஃப். பணிகளுக்கான தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்புக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மத்திய ஆயுதப்படையான சி.ஏ.பி.எஃப் பணிகளுக்கான தேர்வு, கடந்த காலங்களில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. மேலும், மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தையும் அறிவித்தனர்.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட அறிவிப்பில், 'ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் சி.ஏ.பி.எஃப் பணிகளுக்கான தேர்வு நடத்தப்படும்' என்றும், 'இதன் மூலம் துணை ராணுவப் படையில் உள்ளூர் இளைஞர்கள் இடம் பெறுவார்கள் என்றும், பிராந்திய மொழிகளை ஊக்குவிக்கவும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் சி.ஏ.பி.எஃப். பணிகளுக்கான தேர்வு நடத்தப்படும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிப்புக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், 'மத்திய அரசின் இந்த அறிவிப்பால், இளைஞர்களின் கனவு நிறைவேறும். இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்ற மொழி ஒருபோதும் தடையாக இருக்கக்கூடாது' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.