'ஆடம்பரக் கார், சொகுசு பங்களா' -மேட்ரிமோனியல் தளத்தில் பெண்களை ஏமாற்றிய உ.பி இளைஞர்

'ஆடம்பரக் கார், சொகுசு பங்களா' -மேட்ரிமோனியல் தளத்தில் பெண்களை ஏமாற்றிய உ.பி இளைஞர்
'ஆடம்பரக் கார், சொகுசு பங்களா' -மேட்ரிமோனியல் தளத்தில் பெண்களை ஏமாற்றிய உ.பி இளைஞர்

குர்கானுக்கு அருகிலுள்ள வில்லாக்கள் மற்றும் பண்ணை வீடுகளின் புகைப்படங்களை காட்டி தனக்கு சொந்தமானதாகக் காட்டியுள்ளார்.

மிகவும் பணக்காரரைப் போல் காட்டிக்கொண்டு மேட்ரிமோனியல் இணையதளம் மூலம் பெண்களை ஏமாற்றியதாக 26 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். 
உத்தரபிரதேச மாநிலம், முசாபர்நகரில் வசிக்கும் விஷால், தனக்கு பொருத்தமான மணப்பெண்ணை தேட பெரும் பணக்கார இளைஞரைப் போல் நடித்துள்ளார். அவர் பெண்களை கவர விலை உயர்ந்த கார்களைப் பயன்படுத்தியுள்ளார். குர்கானுக்கு அருகிலுள்ள வில்லாக்கள் மற்றும் பண்ணை வீடுகளின் புகைப்படங்களை வெளியிட்டு தனக்கு சொந்தமானதாகக் காட்டியுள்ளார்.
விஷால் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். அதன் பிறகு சொந்தமாகத் தொழில் நடத்தியுள்ளார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால், பெண்களை ஏமாற்றி எளிதாக பணம் சம்பாதிக்க முடிவு செய்துள்ளார். அப்படி விஷாலிடம் ரூ.3.05 லட்சத்தை ஏமாந்த பெண் ஒருவர் வடமேற்கு டெல்லியில் உள்ள கேசவ்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 
குருகிராமில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்த பெண்ணுக்கு திருமணம் நடத்த அவரது பெற்றோர் மேட்ரிமோனியல் இணையதளத்தில் சுயவிவரங்களை பகிர்ந்துள்ளனர். மணமகனைத் தேடும் போது, ஆண்டுக்கு ₹ 50-70 லட்சம் வருமானம் கொண்ட மனிதவளத்துறை அதிகாரி என்று பதிவிட்டு இருந்த இளைஞர் ஒருவரின் சுயவிவரங்களைப் பார்த்துள்ளனர். 
அப்பெண்ணின் குடும்பத்தினர் விரும்பி அந்த இளைஞருக்கு கோரிக்கை அனுப்பியுள்ளனர். தொலைபேசி எண்களை பரிமாறிக்கொண்ட பிறகு, அந்தப் பெண், விஷாலுடன் வாட்ஸ்-அப் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஷாட் செய்யத் தொடங்கியுள்ளார். மார்ச் 2023-ல், விஷால், அந்த இளம்பெண்ணுக்கு விலையுயர்ந்த கார்களின் படங்களை அனுப்பி, ‘இதில் எந்தக் கார் உனக்குப் பிடிக்கும்?’ எனக் கேட்டுள்ளார். அந்தப் பெண்ணைக் கவர்வதற்காக குருகிராமில் உள்ள சில வில்லாக்கள், பண்ணை வீடுகளின் புகப்படங்களை அனுப்பி வைத்து, ’இவை அனைத்தும் தனக்கு சொந்தமானது’ எனத் தெரிவித்துள்ளார்.  
இதனை உண்மை எனக் கருதிய அந்தப் பெண்ணும், அவரது குடும்பத்தினரும் விஷாலை நம்ப ஆரம்பித்துள்ளனர். அந்தப் பெண்ணுக்கு ஐபோன் 14 ப்ரோ மேக்ஸை குறைந்த விலையில் வாங்கித் தருவதாகவும், லாபம் ஈட்டுவதற்காக அதை வாங்கும்படி யும் விஷால் கூறியுள்ளார். அந்தப் பெண்ணின் உறவினர்கள், நண்பர்களுக்கும் தொலைபேசிகளை வாங்கிக் கொடுக்குமாறு வற்புறுத்தியுள்ளார் விஷால். இதற்காக அந்தப்பெண் எட்டு பரிவர்த்தனைகள் மூலம் ₹3.05 லட்சத்தை விஷாலுக்கு மாற்றியுள்ளார். 
பணத்தைப் பெற்ற பிறகு, விஷால் அந்தப்பெண்ணுடன் சமூக வலைதளங்களில் பேசுவதை நிறுத்தி விட்டார். வேறு வகையில் தொடர்பு கொண்டபோது, தான் விபத்தில் சிக்கியதாகவும், ஜெய்ப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் விஷால். அதன் பிறகு விஷால் அந்தப்பெண்ணின் தொடர்புகளை முற்றியுலும் நிறுத்தியுள்ளார். சில நாட்களுக்குப் பிறகு, அந்த பெண் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறை துணை ஆணையர் (வடமேற்கு) ஜிதேந்திர குமார் மீனா, புகாரைப் பெற்ற சில நாட்களுக்குப் பிறகு, அதே மேட்ரிமோனியல் தளத்தில் விஷாலை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். அந்தக் கோரிக்கையை ஏற்ற விஷால் பழைய வழியில் ஏமாற்றத் தொடங்கினார். நேரில் சந்திக்க வேண்டும் என அழைப்பு விடுத்து போலீசார் விஷாலை கைது செய்தனர். 
விசாரணையில் மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார் விஷால். டெல்லியில் எம்.பி.ஏ முடித்த பிறகு, அவர் 2018- குருகிராமில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணி புரிந்துள்ளார்.  2021-ல் வேலையை விட்டுவிட்டு ஒரு உணவகத்தைத் தொடங்கியுள்ளார். ஆனால், அந்தத் தொழில் கைகொடுக்காமல் தோல்வி அடைந்துள்ளார். 
பிறகு விஷால் மேட்ரிமோனியல் தளத்தில் சுயவிவரத்தை உருவாக்கி பணக்கார இளைஞரைப் போல் பதிவிட்டுள்ளார். செயலி மூலம் தினமும் ரூ.2500 வீதம் 15 நாட்களுக்கு ஒரு சொகுசு காரை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தி ஏமாற்றி வந்துள்ளார். இதே போன்ற புகார்கள் விஷால் மீது ஏதும் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அவரது வங்கி கணக்கு விவரங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com