தேசிய திருநங்கைகள் தினம்: எப்போது கிடைக்கும் இடஒதுக்கீடு?

தேசிய திருநங்கைகள் தினம்: எப்போது கிடைக்கும் இடஒதுக்கீடு?
தேசிய திருநங்கைகள் தினம்: எப்போது கிடைக்கும் இடஒதுக்கீடு?

ஆணாதிக்க சிந்தனையைப் போன்றே, இந்த சமூகம் எங்கள் மேல் பால் ஆதிக்க சிந்தனையைக் கொண்டுள்ளது.

'திருநங்கைகளும் இந்த சமூகத்தின் ஓர் அங்கம்' என்பதை உணர்த்தும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 15-ம் நாளை 'திருநங்கையர் நாள்'  எனக் கொண்டாட கடந்த மார்ச் 11, 2011 அன்று தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. 

திருநங்கையர் தினம் ஏன்? 

கடந்த ஏப்ரல் 15, 2008-ம் ஆண்டு தமிழ்நாடு அரசால் திருநங்கைகளுக்கு எனத் தனியாக நலவாரியம் ஒன்று அமைக்கப்பட்டது. திருநங்கைகளை  சிறப்பிக்கும்வகையில் நலவாரியம் அமைக்கப்பட்ட நாளை திருநங்கைகள் நாளாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டது.

கடந்த 2014 ஏப்ரம் 15-ம் தேதி உச்சநீதிமன்றமும், திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலினம் என்ற அங்கீகாரத்தைக் கொடுத்து தீர்ப்பு வழங்கியது. இந்த நாளைத்தான் தேசிய திருநங்கையர் தினமாகக் கொண்டாடுகிறார்கள் திருநங்கைகள்.

''அரசின் முயற்சிகளால் திருநங்கைகள் வாழ்வில் போதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா?'' என்ற கேள்வியை கிரேஸ் பானுவிடம் முன்வைத்தோம். இவர், முதல் பொறியியல் பட்டதாரி திருநங்கையாகப் பார்க்கப்படுகிறார்.

அடித்தளம் அமைத்த கருணாநிதி

''சமூகத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் நிலை, படிப்படியாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்பது மகிழ்ச்சியளிக்கக் கூடிய விஷயம். ஆண்கள் தினம், மகளிர் தினம் போன்று மூன்றாம் பாலினத்தவர்களைக் கொண்டாடுவதாக இந்த தினம் இருந்தாலும், பிற தினங்களைப் போன்றே இந்த தினத்துக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. இந்த நாளுக்கு அடித்தளம் அமைத்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அவர்தான் இந்தியாவிலேயே முதன்முறையாக திருநங்கைகளுக்கென நலவாரியத்தை உருவாக்கினார்.  

பல வருடங்களாக தங்களது உரிமைகளை கேட்டுக்கொண்டே இருக்கும் திருநர்களை மனிதர்களாக அங்கீகரிக்கும் சூழல் இங்கு வந்திருக்கிறது.  இதனடிப்படையில், இந்த தினத்தை ஒரு கொண்டாட்டமாக பார்த்தாலும், எங்களுக்கு கிடைக்க வேண்டிய இன்னும் பல உரிமைகளும் கிடைக்காமல் இருக்கிறது.

இடஒதுக்கீடு எப்போது?

மார் 8-ல் கொண்டாடப்படும் மகளிர் தினம், உழைக்கும் மகளிர் தங்கள் உரிமைக்காக குரல் எழுப்பி தங்கள் உரிமைகளைப் போராடிப் பெற்றதையே காண்பிக்கிறது. அதேபோல, திருநங்கைகளும் கல்வி பயில வேண்டும்.  வேலைவாய்ப்புக்கான உரிமைகளைப் பெற வேண்டும். அதற்கான இடஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும்; பிற பாலினத்தவர்கள் இந்த சமூகத்தில் பெறும் அனைத்து உரிமைகளும் எங்களுக்கும் வேண்டும் எனத் தொடர்ந்து போராடி வருகிறோம்.  

எங்களுக்கான இட ஒதுக்கீடு கிடைத்தாலே இந்த சமூகத்தில் எங்களால் கல்வி கற்க முடியும், வேலைவாய்ப்புகளைப் பெற முடியும். இதையே கோரிக்கையாக வைக்க விரும்புகிறோம்.

அரசு தொடர்ந்து திருநர் மக்களின் நலன்சார்ந்த விஷயங்களை கருத்தில் கொள்கிறார்கள். அதேநேரத்தில் நலன் என்பது வேறு, உரிமை என்பது வேறு. நாங்கள் உரிமைக்காக போராடுகிறோம். எங்களுக்கான கல்வி உரிமை, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு  அனைத்தையும் கொடுக்க அரசு முன்வர வேண்டும். இதற்கு பொது சமூகமும் பெரிய உந்துதலாக இருக்க வேண்டும்;  சமத்துவம் தர வேண்டும். இதனை வாழ்த்துகளைக் கடந்த கோரிக்கையாக வைக்கிறேன்'' என்கிறார்.

பாதிக்கப்படும்போது எழாத குரல்கள் 

தொடர்ந்து பேசிய கிரேஸ் பானு, '' பெண்களுக்கான பாலின சமத்துவம் குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஆனால் எங்களுக்கான சமத்துவம் கிடைக்கும் வரையில் பாலின சமத்துவம் என்ற சொல் முழுமை பெறாது. பெண் கல்வி, பெண் உரிமை என அதிகம் பேசும் இந்தச் சமூகம் இன்னொரு பாலினம் இங்கு இருப்பதையே மறந்து விடுகிறது. இதற்குப் பெயர் பாலின சமத்துவமா? பாலின சமத்துவம் என்பது திருநம்பிகள், திருநங்கைகள் இல்லாமல் சாத்தியமாகாது. 

உலகம் முழுக்க மனித உரிமைகள் பற்றி பேசுகிறார்கள். இதுவும் எங்களுக்கான மனித உரிமைதான். மூன்றாம் பாலினத்தவர்களும் இந்த சமூகத்தில் எல்லோராலும் சக மனிதர்களாக மதிக்கப்பட வேண்டும்'' என்றார்

''மக்களைப் பொறுத்தவரைக்கும் ஏற்றுக்கொள்ளுதல் என்ற விஷயம் இருக்கிறது. தற்போது மூன்றாம் பாலினத்தவர்கள் பரவலாக தெரிகிறார்கள். மக்களில் பலர் எங்களை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஏற்றுக்கொள்ளுதல் என்னும்போது என்னை தெய்வமாக பார்ப்பார்கள், ஆனால் என்னை சக மனிதராகப் பார்க்கமாட்டார்கள். 

எல்லோருக்கும் இருப்பது போன்று இவர்களுக்கும் உரிமைகள் கொடுக்கப்பட வேண்டும், அதற்காக சக மனிதர்களாக நாம் துணை நிற்க வேண்டும், திருநங்கைகளுக்கான வன்கொடுமைகள் நிகழும்போது, சக மக்களாக நாம் குரல் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இந்தச் சமூகத்தில் இல்லை.

ஆணாதிக்க சிந்தனையைப் போன்றே, இந்த சமூகம் எங்கள் மேல் பால் ஆதிக்க சிந்தனையைக் கொண்டுள்ளது. ஆண்கள், பெண்கள் என இரு தரப்புமே எங்களை ஒடுக்குகிறது. இந்த சிந்தனை ஒழியும்போதுதான் மக்கள் எங்களை முழுமையாக ஏற்றுக் கொண்டதாக உணர முடியும்'' என்கிறார், கிரேஸ் பானு.

- ஜெஸ்பெல் எஸ்லின்

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com