இந்தியா தனது அண்டை நாடுகளுக்கும் உதவிக்கரம் நீட்டுகிறது
'வெளிநாட்டிலிருந்து ராணுவத் தளவாடங்கள் இறக்குமதி செய்யப்படும் நிலை மாறி, நாம் பிற நாடுகளுக்கு ராணுவத் தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது' என இந்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் உள்ள ரயில் மகாலில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், மத்திய பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சர் அஜய் பட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் ரயில்வே, அஞ்சல், உயர்கல்வி போன்ற மத்திய அரசின் பல்வேறு பணிகளுக்கான பணி நியமன ஆணைகளை 243 நபர்களுக்கு வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் அஜய் பட், 'நமது பிரதமர் மோடி, தனது சுதந்திர தின உரையில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என கூறியது போலவே, வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
தற்போது 4வது முறையாக நாடு முழுவதும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில், 71 ஆயிரம் பேர் பணி நியமன ஆணைகளைப் பெற்றுள்ளனர். தற்சார்பு பாரதத்தின் மூலம் நாட்டில் பல்வேறு துறைகள் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது.
குறிப்பாக, வெளிநாட்டிலிருந்து ராணுவத் தளவாடங்கள் இறக்குமதி செய்யப்படும் நிலை மாறி, நாம் பிற நாடுகளுக்கு ராணுவத் தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இது நமது நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். இதன் மூலம் இந்தியா தனது அண்டை நாடுகளுக்கும் உதவிக்கரம் நீட்டுகிறது' என்றார்.
இந்த நிகழ்ச்சியில், தி.மு.கவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மற்றும் திருச்சி ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் ராமலிங்கம் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.