ஒரே நாளில் 71,000 பேருக்கு மத்திய அரசு வேலை - ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி

ஒரே நாளில் 71,000 பேருக்கு மத்திய அரசு வேலை - ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி
ஒரே நாளில் 71,000 பேருக்கு மத்திய அரசு வேலை - ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட , வேலை வாய்ப்புகளை பெற்று உள்ள உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

 71 ஆயிரம் பேருக்கு  மத்திய அரசில் பணியாற்றுவதற்கான பணி நியமன உத்தரவுகளை பிரதமர் மோடி இன்று வழங்கினார்.

புதுடெல்லி, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 10 லட்சம் பேருக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தினை பிரதமர் மோடி முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறார். 'ரோஜ்கார்' என்று அழைக்கப்படுகிற இந்த திட்டம்,  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22-ந்தேதியன்று பிரதமர் மோடியால் தொடங்கிவைக்கப்பட்டது.  அப்போது அவர் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 75 ஆயிரம் பேருக்கு வேலை வழங்குவதற்கான பணி நியமன உத்தரவுகளை வழங்கினார்.

இந்த 'ரோஜ்கார்'  திட்டம், இளைய தலைமுறையினரிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு முறையும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மத்திய அரசின்  வேலைவாய்ப்பினை பெற்று வருகிறார்கள். 

இந்நிலையில், பிரதமர் மோடி, இன்று (13-ந்தேதி) காணொலிக்காட்சி வழியாக நடைபெறுகிற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் 71 ஆயிரம் பேருக்கு மத்திய அரசில் பணியாற்றுவதற்கான பணி நியமன உத்தரவுகளை வழங்கினார். அதனை தொடர்ந்து புதிதாக பணி நியமனம் செய்யப்படுகிறவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். 

அவர் பேசுகையில், “நாட்டின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் ஆத்மநிர்பார் பாரத் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் பொம்மை உள்ளிட்ட விளையாட்டு பொருட்கள் உற்பத்தி ஆலையானது முன்னணி வகிக்கிறது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட , வேலை வாய்ப்புகளை பெற்று உள்ள உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் அரசு வேலைகளை வழங்குவது விரைவுப்படுத்தப்பட்டு உள்ளது. மத்திய பிரதேசத்தில் மட்டுமே 22 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை நேற்று வழங்கப்பட்டு உள்ளது. ஓர் அறிக்கையின்படி, ஸ்டார்ட்அப் நிறுவனங்களால் 40 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன என தெரிய வந்துள்ளது” என கூறியுள்ளார்.

ரெயில் நிலைய அதிகாரி, ரெயில் மேலாளர்,  சீனியர் வணிகவியல் மற்றும் டிக்கெட் கிளார்க், ஆய்வாளர், உதவி இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள், சுருக்கெழுத்தர்கள், இளநிலை உதவியாளர்கள், அஞ்சல் உதவியாளர்கள், வருமான வரி ஆய்வாளர்கள், வரி உதவியாளர்கள், மேற்பார்வையாளர்கள், உதவி பேராசிரியர்கள், ஆசிரியர்கள், நூலகர்கள், செவிலியர்கள், நன்னடத்தை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

 மேலும், புதிதாக பணி நியமனம் செய்யப்பட்ட இவர்கள் 'கர்மயோகி பிரராம்ப்' என்கிற ஆன்லைன் பயிற்சியின் மூலம் பயிற்சி பெற்றுக்கொண்டு பணியாற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயிற்சியில் அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகள், மனித வள கொள்கைகள் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com