இந்த ஆண்டின் முதல் அமர்வில், நாடாளுமன்ற இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அதானி விவகாரம் மற்றும் ராகுல் காந்தி எம்பி பதவி பறிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் காரணமாக தொடர் அமளி ஏற்பட்டது. இதனால், தேதி குறிப்பிடாமல் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
இது தொடர்பாக, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கூறுகையில், கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்தப் பட்ஜெட் கூட்டத்தொடரில் மொத்தம் 25 அமர்வுகள் நடைபெற்றது. இடைப்பட்ட நேரத்தில், மாநிலங்களவை மற்றும் மக்களவை, பிப்ரவரி 13ம் தேதி முதல் மார்ச் 12ம் தேதி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
பின்பு, மார்ச் 13ம் தேதி அன்று மீண்டும் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதியில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் 10 அமர்வுகள் நடைபெற்றன. இரண்டாவது பகுதியில் 2 அவைகளிலும் மொத்தமாக 15 அமர்வுகள் நடைபெற்றன. ஆக மொத்தம் 25 அமர்வுகள் நடைபெற்றன.
இந்த ஆண்டின் முதல் அமர்வில், நாடாளுமன்ற இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். பின்னர், பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய பட்ஜெட் குறித்து இரு அவைகளிலும் பொது விவாதங்கள் நடைபெற்றன.
இந்த கூட்டத் தொடரில் 8 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. மக்களவையில் 6 மசோதாக்களும், மாநிலங்களவையில் 6 மசோதாக்களும் நிறைவேறியது. ஒரு சில மசோதாக்கள் திரும்ப அனுப்பப்பட்டன.
இந்தப்பட்ஜெட் கூட்டத் தொடரில் மக்களவையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் 34 சதவீதமும், மாநிலங்களவையில் 24 சதவீதமும் நிறைவேற்றப்பட்டது என்றார்.