‘ராகுலுக்காக நாடாளுமன்றத்தை முடக்குகிறார்கள்’- மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ
நாடாளுமன்றத்தின் கண்ணியம் நிச்சயமாகக் காக்கப்பட வேண்டும்.
ராகுல் காந்திக்காக காங்கிரஸ் மற்றும் அவர்களின் கூட்டணி கட்சியினர் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்குகின்றனர் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தின் 2-வது அமர்வு கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அமர்வில் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல்கள் முடக்கப்படுவதாக வெளிநாட்டில் பேசியதை கண்டித்து பாஜகவினர் கண்டன குரல் எழுப்பினர்.
மேலும் ராகுல்காந்தியின் பேச்சுக்கு ஆளும் பாஜக அமைச்சர், எம்.பிக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.இந்திய நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்ட வேண்டும் என்று பாஜகவினர் வலியுறுத்தி வந்தனர்.
இதற்குப் பதிலடியாக, அதானி குழும விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் எனக் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின. இதனால் நாடாளுமன்ற 2-வது அமர்வு முழுவதும் நடைபெறவில்லை. கடந்த 15 நாட்களாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் உறுதி நாளாக இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது நாடாளுமன்றத்தின் மையப்பகுதிக்கு சென்று எம்.பிக்கள் முழக்கங்களை எழுப்பினர்.அமளி தொடர்ந்ததை அடுத்து, நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற முடக்கத்தால் 100 மணி நேரம் வீணடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.மேலும், மக்களின் வரிப்பணம் 140 கோடிக்கு ரூபாய்க்கு மேல் வீணடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
இதுகுறித்துப் பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ, ‘ராகுல் காந்திக்காக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் இடையூறு செய்தனர். கடைசி நாளிலும், கருப்புச் சட்டை அணிந்து வந்து பாராளுமன்றத்தை அவமதித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தின் கண்ணியம் நிச்சயமாகக் காக்கப்பட வேண்டும். ராகுல் காந்திக்காக எதிர்க்கட்சிகள் என்ன செய்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நாட்டு மக்கள் பாத்துக்கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்தாகச் சூரத்திற்குச் சென்றார்கள் என்பதை நாம் பாத்துக்கொண்டிருக்கிறோம். மேலும் அவர்கள் ஊர்வலம் நடத்திய விதம் கண்டிக்கத்தக்கது’ என்று தெரிவித்தார்.