கேரளாவில் ரயில் பயணிகளுக்கு தீ வைத்தது ஏன்? - கைதான நபரின் அதிர்ச்சி வாக்குமூலம்

கேரளாவில் ரயில் பயணிகளுக்கு தீ வைத்தது ஏன்? - கைதான நபரின் அதிர்ச்சி வாக்குமூலம்
கேரளாவில் ரயில் பயணிகளுக்கு தீ வைத்தது ஏன்? - கைதான நபரின் அதிர்ச்சி வாக்குமூலம்

மும்பையில் ஒருவர் கூறியதன்பேரில் ரயிலுக்கு தீ வைக்க முடிவு செய்தேன்.

கேரளாவில் ‘ரயிலில் பயணிகளுக்கு தீ வைத்தது ஏன்?’ என கைதானவர் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே எலத்தூரில் ரயிலில் பயணிகளை தீ வைத்து கொன்றதாக இரண்டு நாட்களாக தேடப்பட்டு வந்த டெல்லி அருகே நொய்டா பகுதியை சேர்ந்த ஷாருக் சைஃபி மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரியில் கைது செய்யப்பட்டார்.

அங்கிருந்து கேரளாவிற்கு அழைத்து வரப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வேறொருவரின் அறிவுரையால் தான் இந்த குற்றத்தை செய்ய தூண்டியதாகவும், ரயிலில்  இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டால் நல்லது நடக்கும் என யாரோ அறிவுரை கூறியதால் தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து மும்பைக்கு தனது நண்பருடன் சென்றதாகவும், அப்போது ஒரு  நபரை சந்தித்ததாகவும், அந்த நபரின் பேச்சை கேட்டு ரயிலுக்கு தீ வைக்க முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், கேரளா மாநிலம், கோழிகோட்டிற்கு வந்ததாகவும், கோழிகோட்டில் உள்ள பெட்ரோல் பங்க்கில் மூன்று பாட்டில் பெட்ரோல் வாங்கிக்கொண்டு அடுத்த ரயிலில் ஏறி தாக்குதலில் ஈடுபட்டதாகவும், பெட்ரோலை ஊற்றிய பின், தான் வைத்திருந்த லைட்டரால் தீ வைத்து எரித்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், தாக்குதலுக்குப் பிறகு,சம்பவம் நடைபெற்ற பெட்டியிலிருந்து இரண்டு பெட்டிகள் தாண்டி சென்று மீண்டும் ரயிலில் அமர்ந்து கொண்டதாகவும், அந்த ரயிலிலேயே கண்ணூருக்கு சென்றதாகவும் கூறியுள்ளார். பின்னர் அஜ்மீர் செல்ல திட்டமிட்ட நிலையில் மறுநாள் மகாராஷ்டிராவை அடைந்ததாக ஷாருக் சைஃபி கூறியுள்ளார். 

ரத்தினகிரி ரயில் நிலையத்தை அடைந்தபோது ரயிலில் இருந்து தவறி விழுந்த அவரை உள்ளூர்வாசிகள் மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றதாகவும் கூறியுள்ளார். தற்போது ஷாருக் சைஃபி கோழிக்கோடு ஆயுதப்படை வளாகத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்காக அமைக்கப்பட்டுள்ள தனிப்படையின் தலைவரான கேரளா காவல்துறையின் குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி அஜித்குமார் தலைமையிலான அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விசாரணைக்கு பின்பு மதியத்திற்கு 1 மணி அளவில் ஷாருக் சைஃபி கோழிக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com