இது அபத்தமான மற்றும் ஆபத்தான மனு என்றும் விமர்சனம்
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட ஏஜென்ஸி அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை நசுக்குவதாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், ஆர்.ஜே.டி, ஆம் ஆத்மி உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், பா.ஜ.கவை எதிர்க்கும் கட்சிகளைப் பழிவாங்கும் வகையிலும், தங்களது திட்டங்களுக்குப் பணிய மறுக்கும் அரசியல் கட்சிகளை வழிக்கு கொண்டு வரும் வகையிலும் சி.பி.ஐ., வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறையை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இதனால், சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகளை வரையறுக்க வேண்டும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவானது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் ஜே டீ பர்திவாலா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "இந்த விவகாரத்தில் அரசியல்வாதிகளுக்குச் சிறப்பு உரிமை ஏதும் வழங்கமுடியாது.
அவர்களும் குடிமக்களில் ஒருவரே" என்றும், "இது அபத்தமான மற்றும் ஆபத்தான மனுக்கள் என்றும், தனிப்பட்ட முறையில் பிரச்சினைகள் இருந்தால் அது தொடர்பாகக் கீழமை நீதிமன்றங்களில் தீர்வு காணலாம்" என்று தெரிவித்து, இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.