அட்டப்பாடி மது கொலை வழக்கு: ‘13 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை’ - நீதிமன்றம் தீர்ப்பு

அட்டப்பாடி மது கொலை வழக்கு: ‘13 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை’ - நீதிமன்றம் தீர்ப்பு
அட்டப்பாடி மது கொலை வழக்கு: ‘13 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை’ - நீதிமன்றம் தீர்ப்பு

குற்றவாளிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பு

அரிசி திருடியதாக அட்டப்பாடி இளைஞர் மது அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 13 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரள மாநிலம், பாலக்காடு அருகே அட்டப்பாடி பகுதியைச் சேர்ந்த பழங்குடி இளைஞர் மது என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்.22ம் தேதி பசிக்கு அரிசி திருடியதாக ஒரு கும்பலால் அடித்துக்கொல்லப்பட்டார். இதுகுறித்த வீடியோக்கள், படங்கள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான வழக்கு மண்ணார்காடு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் 16 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு இருந்தனர்.103 சாட்சிகளிடம் அரசுத்தரப்பு வழக்கறிஞர் விசாரணை நடத்தினார். இதில் 24 சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறினர்.

குற்றம்சாட்டப்பட்டவர்களின் தரப்பில் 8 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். மேலும் மது மரணம் அடைந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி காட்சிகள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் எடுத்த வீடியோக்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில், மது கொலை வழக்கை நேற்று விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பு அறிவித்துள்ளது. 

அதில், நான்காம் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட அனீஷ், 11ம் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட அப்துல்கரீம் ஆகியோரை குற்றமற்றவர் என விடுக்கப்பட்டனர். முதல் குற்றவாளியான ஹூசைன் உள்ளிட்ட 14 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், அவர்களுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்திருந்தது.

அதன்படி, 14 குற்றவாளிகளுக்கும் தண்டனை விவரத்தை நீதிமன்றம் அறிவித்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட 16 பேரில் 13 பேருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து மண்ணார்காடு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 16வது குற்றவாளியான முனீர் தவிர 13 பேருக்கு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் குற்றவாளிகளுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளனர். அபராதத்தொகையில் பாதியை மதுவின் தாயாருக்கு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 16வது குற்றவாளியான முனீருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனையும், ஐநூறு ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தவனூர் சிறைக்கு மாற்றப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுவின் தாய் மல்லி, சகோதரி ஆகியோர் நேற்று பேசுகையில், “இந்த வழக்கில் நீதி கிடைக்கவில்லை. 16 பேரும் குற்றவாளிகள் என நாங்கள் கருதுகிறோம். ஆகையால் 2 பேர் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை செல்லவும் தயாராக உள்ளோம்” எனத் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com