’சட்டத்தை, குண்டர்கள் கையில் எடுக்க விடமாட்டோம்’ என மேற்குவங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம், ஹூக்ளி மாவட்டம் ரிஷ்ராவில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ராமநவமி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் பா.ஜ.க தேசிய துணைத்தலைவர் திலீப் கோஷ், பா.ஜ.க எம்.எல்.ஏ பீமன் கோஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் மீது திடீரென கற்கள் வீசப்பட்டதால் பெரும் வன்முறை உருவானது. இதனால் கடைகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பா.ஜ.க எம்.எல்.ஏ. பீமன் கோஷ் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த வன்முறையானது ரிஷ்ராவுக்கு அருகே உள்ள செரம்போர் பகுதிகளுக்கும் பரவியது.
இதன் காரணமாக அப்பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், அப்பகுதிகளில் இணையதள சேவையும் முடக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவும் இந்த வன்முறை அந்தப் பகுதிகளில் வெடித்த நிலையில் மேற்கு வங்காள மாநில கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் ஜி20 தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பதற்காக மாநிலத்தின் வடபகுதியில் உள்ள டார்ஜிலிங்குக்கு சென்றிருந்தார்.
அப்போது ராம நவமி ஊர்வலத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் குறித்து கேட்டு அறிந்துவிட்டு கவர்னர் சி.வி.ஆனந்தபோஸ் நேற்று விமானம் மூலம் கொல்கத்தாவுக்கு திரும்பினார். இதன் பிறகு விமான நிலையத்தில் இருந்து நேராக ஹூக்ளி மாவட்டம் ரிஷ்ராவுக்கு சென்றார்.
பின்னர் அங்கு வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் நேரில் பார்வையிட்டார். போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோருடன் பேசி, நிலைமையைக் கேட்டறிந்த கவர்னர் ஆனந்த போஸ் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, ‘குண்டர்கள் யாரும் சட்டத்தை தங்களுடையக் கையில் எடுக்க அனுமதிக்க மாட்டோம். கும்பல் வன்முறையை ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்’ என கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் கூறினார்.