வழக்கில் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை;உச்சநீதிமன்றம் வரை செல்வோம் என மதுவின் தாய் தகவல்
கேரள மாநிலம், பாலக்காடு அருகே அட்டப்பாடி பகுதியைச் சேர்ந்த பழங்குடி இளைஞர் என்பவர் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்.22ம் தேதி ஒரு கும்பலால் பசிக்கு அரிசி திருடியதாக அடித்துக்கொல்லப்பட்டார்.
இளைஞர் மதுவை அஜமுடி என்ற காட்டுப்பகுதியில் இருந்து பிடித்துக்கொண்டு வந்து முக்காலி பகுதியில் வைத்து அடித்து உதைத்துள்ளனர்.இதில் 45க்கும் மேற்பட்ட காயங்கள் ஏற்பட்டு அவர் மரணம் அடைந்தார்.இதுகுறித்த வீடியோக்கள்,படங்கள் வெளியாகியது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கு மண்ணார்க்காடு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் 16 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு இருந்தனர்.103 சாட்சிகளிடம் அரசுத்தரப்பு வழக்கறிஞர் விசாரணை நடத்தினார். இதில் 24 சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறினர்.
குற்றம்சாட்டப்பவர்களின் தரப்பில் 8 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். மேலும் மது மரணம் அடைந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டர்கள் எடுத்த வீடியோக்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில், மது கொலை வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பு அறிவித்துள்ளது. அதில், நான்காம் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அனீஷ், 11ம் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அப்துல்கரீம் ஆகியோரை குற்றமற்றவர் என விடுக்கப்பட்டனர்.முதல் குற்றவாளியான ஹூசைன் உள்ளிட்ட 14 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் அவர்களுக்கான தண்டனை நாளை அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.மது கொலை வழக்கில் 5 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
அதே சமயம் மது கொலை வழக்கில் நீதி கிடைக்கவில்லை என மதுவின் தாய் மல்லி, சகோதரி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசியுள்ள அவர்கள், “இந்த வழக்கில் நீதி கிடைக்கவில்லை. 16 பேரும் குற்றவாளிகள் என நாங்கள் கருதுகிறோம். ஆகையால் 2 பேர் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை செல்லவும் தயாராக உள்ளதாக கூறியுள்ளனர். மேலும் இந்த வழக்கிற்காக பல துயரங்களை சந்தித்தோம். நிறைய மிரட்டல்கள் வந்தன” என்றும் தெரிவித்துள்ளனர்.