புதுச்சேரியை மத்திய பாஜக அரசு புறக்கணிக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது
புதுச்சேரியில் பா.ஜ.க பிரமுகர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் ரங்கசாமி உடனடியாகச் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரியில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “பிரதமர் மோடி மத்திய அரசுக்குச் சொந்தமான பொதுத் துறை நிறுவனங்களின் உரிமத்தை அதானிக்கு கொடுத்துள்ள விவகாரம் தொடர்பாக, பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி கேள்வி எழுப்பினார். அதனால் பழைய வழக்கை கையில் எடுத்து ராகுல்காந்தி எம்.பி பதவி பறிக்கப்பட்டது.
அதானி விவகாரத்தால் பாராளுமன்றம் முடங்கியுள்ளது. இந்திய வரலாற்றில் இவ்வளவு நாள் பாராளுமன்றம் முடங்கியது இல்லை.இதுதான் முதல் தடவை.தொடர்ந்து இந்த விவகாரத்தில் போராட்டம் நடைபெறும். அதானி விவகாரத்தில் மோடி ஏன் பதில் கூற மறுக்கிறார் எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டு ஜிப்மரில் இயங்கி வந்த உடல் உறுப்பு மாற்றுச் சிகிச்சை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியை மத்திய பாஜக அரசு புறக்கணிக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.காங்கிரஸ் ஆட்சியில் இலவச சிகிச்சை, மருந்துகள் தாராளமாக வழங்கப்பட்டது. ஆனால்,பாஜக ஆட்சிக்கு வந்ததும் இந்த முறை சீரழிந்து உள்ளது.
புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக அரசு மற்றும் மத்திய பாஜக அரசால் நோயாளிகள் சீரழிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது,புதுச்சேரியில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது மக்களுக்கு அதிகச் சுமையை ஏற்படுத்தியுள்ளதால் முதலமைச்சர் ரங்கசாமி உடனடியாக இந்த மின் உயர்வு கட்டணத்தை ரத்துச் செய்ய வேண்டும் என நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தில் பல்வேறு அறிவிப்புகளையும், உத்தரவுகளை வாரி வழங்கியுள்ள முதலமைச்சர் ரங்கசாமி, அனைத்துத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தை ரூ.10,000 லிருந்து ரூ.18,000 ஆக உயர்த்தி அறிவித்துள்ளார். இதற்கு எங்கிருந்து பணம் உள்ளது.
முதலமைச்சரின் திட்டமே தொழிலாளிகளைப் பணிநிரந்தரம் விதிமுறைகளை மீறிச் செய்வது தான் என்றும், நிர்வாகம் தெரிந்து முதலமைச்சராக இருந்தால் நிதி ஒதுக்கி விட்டுச் சம்பளம் உயர்த்தி இருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யவில்லை. இதையே தனது வாடிக்கையாக முதலமைச்சர் ரங்கசாமி கொண்டுள்ளார் என்றார்.
மேலும்,ஊழியர்களுக்கு 6 மாதம் சம்பளம் வழங்கிவிட்டு அவர்களை நடுத்தெருவில் நிற்க வைக்கப்போகிறார். இதுதான் நடக்கப் போகிறது. முதலமைச்சர் ரங்கசாமி விளம்பர அரசியலை செய்து வருகிறார். இது நீண்ட காலம் நிற்காது என்றும், புதுச்சேரி மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலையில் உள்ளது.
நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு புதுச்சேரி மாநிலத்தில் சரளமாக நடைபெற்று வருவதாகவும், வில்லியனூர் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து அதிக அளவில் நடைபெற்று வருவதாகவும், அந்தக் காவல் நிலையத்தில் அதிகாரி முதல் காவலர்கள் வரை ஊழல் மலிந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும் பாஜக பிரமுகர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் கட்சியில் இருந்த போது நன்கு வளர்ந்து வந்த நபர், பின்னர் பாஜகவுக்குச் சென்றதும், அவருக்கு முடிவு காலம் வந்துவிட்டது. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.