'வாக்கு வங்கியை மையப்படுத்தியே காங்கிரஸ் அரசு செயல்பட்டது' - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

'வாக்கு வங்கியை மையப்படுத்தியே காங்கிரஸ் அரசு செயல்பட்டது' - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
'வாக்கு வங்கியை மையப்படுத்தியே காங்கிரஸ் அரசு செயல்பட்டது' - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

உலகின் சிறந்த ரயில்துறையாக இந்திய ரயில்வேயை மாற்ற இந்த அரசு பாடுபட்டுவருகிறது

'கடந்தகால காங்கிரஸ் அரசு, வாக்கு வங்கியை மையப்படுத்தியே செயல்பட்டது. ஆனால், நாங்கள் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் வேகமாகவும், உறுதியாகவும் செயல்படுகிறோம்' என பிரதமர் மோடி தெரிவித்தார்.

போபால் - புது தில்லி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை, மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, வந்தே பாரத் எக்ஸ்பிரஸை ஆய்வு செய்தார். ரயிலில் உள்ள குழந்தைகள், பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.

பின்னர் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 'இந்த ரயில் டெல்லி - போபால் இடையிலான பயண நேரத்தைக் குறைக்கும். தொழில் வல்லுநர்கள், இளைஞர்களுக்கு பல்வேறு வகையில் உதவியாக இருக்கும். இந்த ரயில் சேவை மூலம் சாஞ்சி, பிம்பேட்கா, போஜ்பூர் மற்றும் உதயகிரி பகுதிகள் அதிக அளவில் பயன்பெறும். இது வேலை வாய்ப்பு, வருமானம் மற்றும் சுயதொழில் வாய்ப்புகளை அதிக அளவில் உருவாக்கும்.

கடந்தகால காங்கிரஸ் அரசு, வாக்கு வங்கியை மையப்படுத்தியே செயல்பட்டது. ஆனால், நாங்கள் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் வேகமாகவும், உறுதியாகவும் செயல்படுகிறோம். சுதந்திரத்திற்குப் பிறகு ரயில் சேவைகளை கடந்த கால அரசு நவீனமயமாக்கி இருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல், அரசியல் காரணங்களுக்காக ரயில்வே துறையை சீரழித்துவிட்டனர்.

'ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு' முயற்சியின் மூலம், உள்ளூர் கைவினைஞர்களின் தயாரிப்புகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் சக்திவாய்ந்த கருவியாக ரயில்வே துறை மாற்றப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ், மாவட்டத்தின் உள்ளூர் தயாரிப்புகளான கைவினைப் பொருட்கள், கலை, பாத்திரங்கள், ஜவுளி, ஓவியம் போன்றவற்றை பயணிகள் நிலையத்திலேயே வாங்கமுடியும். நாட்டில் ஏற்கனவே இதுபோன்று சுமார் 600 விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன, அவைகள் மேலும், அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு ரயில்வே வழித்தடங்களின் சராசரி மின்மயமாக்கல் ஆண்டுக்கு 600 கிலோமீட்டரிலிருந்து 6,000 கிலோமீட்டராக பத்து மடங்கு அதிகரித்துள்ளது. ரயில்வே நிலையங்கள் நவீனமயமாக்கல் மூலம், 6,000 ஸ்டேஷன்களில் வைஃபை வசதி, 900 ஸ்டேஷன்களில் சி.சி.டி.வி. கேமரா உள்ளிட்ட சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற பல்வேறு வசதிகளை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ரயில்வேக்கு அதிகளவில் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்திய ரயில்வே துறையில், தூய்மை, சரியான நேரத்தில் பயணம் மற்றும் நவீன தொழில்நுட்பம் ஆகியவற்றை மிகுந்த அக்கறையுடன் செயல்படுத்தி வருகிறோம். உலகின் சிறந்த ரயில்துறையாக இந்திய ரயில்வேயை மாற்ற இந்த அரசு பாடுபட்டுவருகிறது. நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வந்தே பாரதத்திற்கான தேவை அதிகரித்து வருகிறது' என்றார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com