அறிவியல் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன் ஆகாய விமானங்கள் உலகம் முழுவதும் பிரபலமான நிலையில், தற்போது பறக்கும் பைக், கார் வரை உலகம் அதீத அறிவியல் வளர்ச்சியைக் கண்டுள்ளது.
இந்நிலையில், ’’நாம் பறக்கும் கார்களை இதுவரையில் சினிமாவில்தான் பார்த்தோம்; ஆனால், விரைவில் அது பயன்பாட்டுக்கு வரவுள்ளது’’ என மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ‘’அடுத்த 5 ஆண்டுகளுக்குள் பறக்கும் டாக்ஸி சேவை பயன்பாட்டிற்கு வரும். விரைவிலேயே இந்தியாவில் பறக்கும் டாக்ஸி சேவை மிகப்பெரிய அளவில் வளரும். உலகில் போக்குவரத்துப் புரட்சி இந்தியாவில் துவங்குகிறது. இன்று 31% முதல் 49% இந்தியர்கள் நேரத்தை மிச்சப்படுத்தக் குறுகிய சேவைகளின் அடிப்படையில் மேம்பட்ட ஏர் மொபிலிட்டி மூலம் பயணிக்க விரும்புகிறார்கள்.
நாம் பேசும் பறக்கும் கார்களுக்கான சந்தையைக் கற்பனை செய்து பாருங்கள். உலகின் 650 மில்லியன் மக்கள் இருக்கக்கூடிய நிலையில் அவர்கள் பயன்படுத்தப்போகும் பறக்கும் கார்களைப் பற்றி பேசுகிறீர்கள், அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையை விட இரண்டு மடங்கு மற்றும் ஐரோப்பாவின் மக்கள் தொகையை விட 1.3 மடங்கு இந்தியாவில் அதிகம். பறக்கும் கார்களை இன்று இந்தியா அன்றாட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகப் பின்பற்றத் தயாராக உள்ளது.
செங்குத்தாக பறக்கும் கார்கள் தரையிறங்கவும், புறப்படவும் தளங்களை உருவாக்கி உள்கட்டமைப்பை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் உள்ளது. குறுகிய இடங்களில் தரையிறங்கும் மற்றும் புறப்படும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் இறங்குதளங்கள் அமைப்பது மட்டுமல்லாமல், இந்தியாவில் வளர்ந்து வரும் எலக்ட்ரிக் கார் சந்தையைப் போலவே பறக்கும் கார்களுக்கான சார்ஜ் ஏற்றும் வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்’’என அவர் தெரிவித்தார்.