ராமர் கோவில் கட்டப்படும் என்று கர்நாடக அரசு பட்ஜெட்டில் அறிவித்தது
கர்நாடகாவில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலின் மாதிரி குறித்த வீடியோ இன்று வெளியிடப்பட்டது.
கர்நாடக மாநிலம் ராமநகரில் உள்ள ராமதேவரா மலையில் ராமர் கோவில் கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டது. இதனையடுத்து, ராமர் கோவில் கட்டப்படும் என்று கர்நாடக அரசு பட்ஜெட்டில் அறிவித்தது. ராமர் கோவில் மொத்தம் 19 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட உள்ளது. கோயிலில், பிரமாண்ட பெரிய அளவிலான கோபுரம், அனைத்து வசதிகளுடன் கூடிய படிக்கட்டு, சிவன், சாலுமண்டபம், ஆஞ்சநேயர் கோவில் மற்றும் காட்சி கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளது.
மேலும், கோவிலில், குடிநீர், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு மொத்தம் 120 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடபட்டுள்ள நிலையில், அரசு தற்போது முதற்கட்டமாக ரூ.40 லட்சத்தை ஒதுக்கி உள்ளது. அதன்படி, ராமர் கோவிலை வடிவமைக்கும் வரைப்படம் உருவாக்கும் பணி கடந்த சில நாட்களாக மிகுந்த வேகத்தில் நடைபெற்று வந்தது.
கோவில் கட்டும் பணிகள் மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயண் தலைமையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் ராமநகரில் கோவில் கட்ட வரைபடம் தயாரிக்கும் பணியிலும் அவர் ஈடுபட்டார். இந்த நிலையில், ராமர் கோவிலின் கட்டிட வரைபட வீடியோவை அமைச்சர் அஸ்வத் நாராயண் வெளியிட்டார். 2 நிமிடம் ஓடும் இந்த வீடியோவில் கோவிலின் வளாகம், மண்டபம், கோபுரம், கோவிலின் மைய பகுதி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது.
ஏற்கனவே உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்குப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி அடிக்கல் நாட்டினார். ராமர் கோவிலின் கட்டுமானத்தை ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா மேற்பார்வை செய்கிறது. கட்டுமானக் குழுவின் தலைவராக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி நிருபேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். கோவில் கட்ட முன்பு 400 கோடி ரூபாய் செலவாகும் எனக் கணக்கிட்டிருந்த நிலையில், தற்போது 1,800 கோடி ரூபாய் வரை செலாவகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
புதிய கோயிலின் கர்ப்பகிரகத்தில் 2023ஆம் ஆண்டில் ராமர், சீதா, லட்சுமணர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் என்றும், 2024ம் ஆண்டுக் கோயிலின் கட்டுமான பணிகள் முழுவதுமாக நிறைவு பெறும் என்றும் கூறப்படுகிறது. அதேப் போல் கர்நாடகா மாநிலத்திலும் கோயிலின் கட்டுமான பணிகள் வேகம் எடுத்துள்ளன.
வடஇந்தியாவில் உத்தரபிரதேசத்திலும், தென்னிந்தியாவில் கர்நாடகாவிலும் ஒரே நேரத்தில் ராமர் கோவில் திறப்பு விழா நடக்க வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.