தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய ஒரு மாத கால அவகாசம் உள்ளது
ராகுல் காந்தியின் வயநாடு தொகுதிக்கு ஏன் இடைத்தேர்தல் அறிவிக்கவில்லை? என்பது குறித்துத் தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். அதில், 'வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்க இன்னும் 6 மாதம் வரை அவகாசம் உள்ளது' என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு ஒன்றில் 23ம் தேதி சூரத் நீதிமன்றம், ராகுல் காந்தி குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. போலீசாரால் கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் வகையில் உடனடியாக ஜாமீனும் வழங்கப்பட்டது.
சூரத் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, கேரளாவில் உள்ள வயநாடு மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தியைத் தகுதிநீக்கம் செய்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து, கேரளாவில் உள்ள வயநாடு மக்களவை தொகுதி காலியாக உள்ளதாக மக்களவைச் செயலகம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்ட வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக யூகத்தகவல் வெளியானது. ஆனால், அதுபோல் எந்த ஒரு அறிவிப்பையும் தலைமை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை.
இந்த நிலையில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வயநாடு தொகுதிக்கு ஏன் இடைத்தேர்தல் அறிவிக்கவில்லை? என்பது குறித்து செய்தியாளர்களுக்கு, தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். அதில், 'வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்க இன்னும் 6 மாதம் வரை அவகாசம் உள்ளது என்றும், தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய ஒரு மாத கால அவகாசம் உள்ளது என்றும், இதனால், வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்க அவசரம் காட்டவில்லை என்றும், தெளிவுப்படுத்தினார். இதனால், வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கு தற்போது தேர்தல் நடைபெறாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.