கேரளா உயர் நீதிமன்றம், கீழ்கோர்ட் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது
கொலை முயற்சி வழக்கு ஒன்றில் குற்றவாளி என 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், லட்சத்தீவு மக்களவை உறுப்பினர் முகமது ஃபைசல் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தகுதி நீக்கத்துக்கு எதிராக கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் முகமது ஃபைசலின் தகுதி நீக்கத்தை மக்களவை செயலகம் ரத்து செய்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் தேதி அன்று ஆந்த்ரோ தீவு காவல் நிலையத்தில் முகமது ஃபைசல் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. இதனிடையே, 2019ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் முகமது ஃபைசல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த 2023 ஜனவரி 11ம் தேதி அன்று, மறைந்த மத்திய அமைச்சர் பி.எம்.சயீதின் மருமகன் முகமது சாலிஹை கொலை செய்ய முயன்ற வழக்கில் முகமது ஃபைசல் மற்றும் மூன்று பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கவரத்தி அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், 2023 ஜனவரி 13ம் தேதி அன்று, மக்களவை செயலகம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 8(3) இன் கீழ் முகமது ஃபைசலை தகுதி நீக்கம் செய்தது. இதனைத்தொடர்ந்து, லட்சத்தீவு இடைத்தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த தண்டனையை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி. முகமது ஃபைசல், கேரள மாநில உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், கீழ்கோர்ட் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இதனால் லட்சத்தீவு இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றது.
இதனிடையே, தகுதி நீக்கம் செய்யப்பட்ட லட்சத்தீவு எம்பி. முகமது ஃபைசல் மக்களவை செயலகத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், 'தன் மீதான குற்றச்சாட்டு மற்றும் 10 ஆண்டு சிறை தண்டனைக்குக் கேரள மாநில உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஆனால், தகுதி நீக்கம் செய்யும் அறிவிப்பை மக்களவை செயலகம் திரும்பப் பெறவில்லை எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், தகுதி நீக்கம் தொடர்பான அறிவிப்பை ரத்து செய்யாததால், பாராளுமன்றத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தொடரில் பங்கேற்க தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும்' அவர் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில், லட்சத்தீவு இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது. அதேபோல, நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து தகுதி நீக்கத்தை ரத்து செய்துள்ளது மக்களவைச் செயலகம்.