மோடி என்ற சமூகமே இல்லை என ராகுல் காந்தியின் வழக்கறிஞர் கூறியுள்ளார்
கடந்த 2019 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, ‘மோடி என்கிற சமூகம் குறித்து அவதூறாக பேசியதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை கைது செய்யக் கோரி பா.ஜ.க எம்.எல்.ஏ புர்னேஷ் மோடி என்பவர் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் தீர்ப்பில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை சமீபத்தில் விதிக்கப்பட்டது. மேலும், சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுல் காந்திக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.
போலீசாரால் கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் வகையில் உடனடியாக ஜாமீனும் வழங்கப்பட்டது. சூரத் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து கேரளாவில் உள்ள வயநாடு மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவு பிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து கேரளாவில் உள்ள வயநாடு மக்களவை தொகுதி காலியாக உள்ளதாக மக்களவைச் செயலகம் அறிவித்துள்ளது. இதேப்போல வயநாடு மக்களவை தொகுதி காலியாக உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையமும் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் ‘மோடி என்கிற சமூகமே இல்லை’ என ராகுல் காந்தியின் வழக்கறிஞர் கிரித் பன்வாலா கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் கிரித் பன்வாலா, ‘ஒரு குறிப்பிட்ட நபர் மீது குற்றச்சாட்டு இருந்தால் அவர்தான் பாதிக்கப்பட்டவராக புகார் அளிக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது. இந்த விவகாரத்தில், மோடிதான் புகார் அளித்திருக்க வேண்டும். மாறாக புர்னேஷ் மோடி வழக்கு தொடுத்துள்ளார்.
இதற்கு சட்டம் இடம் கொடுக்காதபோது அவரால் எப்படி வழக்கு தொடுக்க முடியும்? இந்த வழக்கில் ராகுல் காந்தி, ‘மோடி’ என்ற ஒட்டுமொத்த சமூகத்தை அவமதித்து விட்டதாக கருதுகின்றனர். ஆனால் உண்மையில் மோடி சமூகத்தை பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. இதை நாங்கள் நிரூபித்துள்ளோம்.
அப்படி இருக்கும்போது இந்த சமூகத்தின் பிரதிநிதி என எப்படி ஒருவர் வழக்கு தொடுத்தார்? என்கிற கேள்வி எழுகிறது’ என ராகுல் காந்தியின் வழக்கறிஞர் கிரித் பன்வாலா கூறி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.