வாகன ஓட்டிகள் பயணித்த தொலைவுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும்
'நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகள் விரைவில் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக ஜி.பி.எஸ் அடிப்படையில் புதிய கட்டண வசூல் முறை செயல்படுத்தப்படும்' என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
நமது நாட்டில், கடந்த காலத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் நேரிடையாக பணம் செலுத்தும் முறையால், வாகன ஓட்டிகள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலையும், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதற்கு தீர்வு காணும் வகையில் நாட்டில் உள்ள 600 சுங்கச்சாவடிகளிலும் ஃபாஸ்ட் டேக் முறையில் சுங்கக் கட்டணம் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால், போக்குவரத்து நெருக்கடியும், காலநேரமும் மிச்சமானது.
இந்த நிலையில், ஃபாஸ்ட் டேக் முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் முறையும் விரைவில் மாற்றியமைக்கப்படும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நிதின் கட்கரி, 'நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றப்படும். அதற்கு பதில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதாவது, ஜி.பி.எஸ் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த முறை அடுத்த ஆறு மாதங்களில் அமல்படுத்தப்படும். இதனால் வாகன ஓட்டிகள் பயணித்த தொலைவுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது சுங்க கட்டண வருவாய் ரூ.40,000 கோடியாக உள்ளது. இது அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் ரூ.1.40 லட்சம் கோடியாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது' என்றார்.