கர்நாடகா: இஸ்லாமியர்களின் தனி இடஒதுக்கீடு ரத்து - பா.ஜ.க அரசின் முடிவுக்கு என்ன காரணம்?

கர்நாடகா: இஸ்லாமியர்களின் தனி இடஒதுக்கீடு ரத்து - பா.ஜ.க அரசின் முடிவுக்கு என்ன காரணம்?
கர்நாடகா: இஸ்லாமியர்களின் தனி இடஒதுக்கீடு ரத்து - பா.ஜ.க அரசின் முடிவுக்கு என்ன காரணம்?

கர்நாடகாவில் இஸ்லாமியர்களின் தனி இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் பெங்களூரு விதான் சவுதாவில் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்துக்கு பிறகு முதலமைச்சர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

கர்நாடகா மாநிலத்தில் லிங்காயத், ஒக்கலிகர்கள் உள்பட பல்வேறு சமூக மக்கள் தங்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேப் போல் தலித் சமூகத்தினரும் உள் இடஒதுக்கீடு வேண்டும் என நீண்ட காலமாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கை குறித்து பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஆய்வு செய்து அறிக்கை வழங்கியது. 

இதன்படி ஒக்கலிகர் சமூகத்திற்கு இடஒதுக்கீடு பட்டியலில் 2 சி அந்தஸ்து, லிங்காயத் சமூகத்திற்கு 2 டி அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்த சமூகங்களுக்கு தற்போது இடஒதுக்கீடு பகிர்ந்து அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒக்கலிகர்களுக்கு 6 சதவீதம் மற்றும் லிங்காயத் சமூகத்திற்கு 7 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேப்போல் தலித் சமூகத்தி்ற்கு 17 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 

இதில் சிறிய சமூகங்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டது. எனவே அந்த சமூகத்தில் வலதுசாரி சமூகங்களுக்கு 5½ சதவீதம், இடதுசாரி சமூகங்களுக்கு 6 சதவீதம்  உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மீதமுள்ள 5½ சதவீதம் இந்த சமூகத்தின் பிரதான பிரிவுகளுக்கு கிடைக்கும்.

2பி அந்தஸ்தில் உள்ள முஸ்லிம்கள் தனி இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுகிறது. அதாவது பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு பதிலாக முஸ்லீம்கள் பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவு இடஒதுக்கீட்டில் சேர்க்கப்படுவார்கள். இதில் 10 சதவீதம் இடஒதுக்கீடு கிடைக்கும். இதனால் முஸ்லிம் மக்களுக்கு கூடுதல் பலன் கிடைக்கும். இவ்வாறு முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறினார். 

கர்நாடகா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல்  விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலை மனதில் வைத்து பா.ஜ.க அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுவதால் இதன் தாக்கம் வரும் தேர்தலில் எதிரொலிக்கும் என அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது. 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com