‘மத்திய அரசு பெண் ஊழியர்களுக்கு மாதவிலக்கு விடுப்பு இல்லை’ என, மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு விடுமுறை அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வலியுறுத்தி ஷைலேந்திர மணி திரிபாதி என்பவர் கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு ‘இந்த விவகாரம் பல்வேறு கொள்கை பரிணாமங்களை கொண்டிருக்கிறது.
மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை இந்த மனு குறித்து பரிசீலித்து மனுதாரரின் குறையை நிவர்த்தி செய்ய வேண்டும்’ என தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் மதுரை தொகுதி மக்களவை எம்.பி.வெங்கடேசன் மத்திய அரசில் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிலக்கு கால விடுப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அரசு ஊழியர்களுக்கு பொருந்தும் மத்திய அரசுப் பணிகள் (விடுமுறை) விதிகள் 1972-ல் மாதவிலக்கு விடுமுறைக்கான எந்த ஏற்பாடுகளும் இல்லை. இந்த விதிகளில் இதுபோன்ற விடுமுறையை சேர்க்க தற்போது எந்த முன்மொழிவும் இல்லை.
மத்திய அரசின் பெண் ஊழியர்களுக்கு ஏற்கனவே ஈட்டிய விடுமுறை, அரை ஊதிய விடுமுறை, கூடுதல் சாதாரண விடுமுறை, குழந்தைப் பராமரிப்பு விடுமுறை, மாற்றியமைக்கப்பட்ட விடுமுறை, மகப்பேறு விடுமுறை, மருத்துவச் சான்றிதழ் விடுமுறை, மற்றும் நிலுவையில்லா விடுமுறை என்று பல விடுமுறைகள் உள்ளன.
எனவே மத்திய அரசின் கீழ் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு மாதவிலக்கு விடுமுறை போன்ற எந்த ஏற்பாடுகளும் இல்லை. இவ்வாறு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.