டெல்லி உள்பட வடமாநிலங்களில் நில அதிர்வு ஏற்பட்டது
டெல்லி உள்பட வடமாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால் பீதி அடைந்த மக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
ஆப்கானிஸ்தானில் நேற்று மாலை சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 6.8 என்ற அளவுக்கு சக்தி வாய்ந்ததாக பதிவாகி உள்ளது.
இந்த நில அதிர்வின் மையம் ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள இந்துகுஷ் மலைத்தொடர் பகுதியில் இருந்தது தற்போது தெரிய வந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நில அதிர்வை தொடர்ந்து அதனுடைய தாக்கம் இந்தியாவிலும் இரவு 10.22 மணியளவில் உணரப்பட்டுள்ளது.
டெல்லி, உத்தரப் பிரதேசம், இமாச்சல பிரதேசம், பஞ்சாப் மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
டெல்லி அருகே உள்ள காசியாபாத், நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டு கட்டிடங்கள் குலுங்கியுள்ளது.
இதனால் வீடுகளில் வசிக்கும் மக்கள் தங்களுடைய குடியிருப்புகளை விட்டு வெளியே ஓடி வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்தியா மட்டும் இல்லாமல் அருகில் உள்ள பாகிஸ்தான், சீனா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே டெல்லியின் ஷாகர்பூர் பகுதியில் கட்டிடம் ஒன்று திசை திரும்பி இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.