ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளும் கட்சி எம்பிக்கள் அமளி
எதிர்க்கட்சிகள், ஆளுங்கட்சிகள் அமளியால் 5 ஆவது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 ஆவது அமர்வு பிப்ரவரி 13 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இரு அவைகளும் தொடர்ந்து 5ஆவது நாளான இன்றும் முடங்கியது. மக்களவையும், மாநிலங்களவையும் முடங்கியதால் கூட்டத்தொடரில் நடைபெற வேண்டிய விவாதங்கள் எதுவும் நடைபெறவில்லை
முதல் நாளிலிருந்தே அதானி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியும், ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது குறித்து பேசியும் ஆளும்கட்சியும், எதிர்க்கட்சிகளும் அமளியில் ஈடுபட்டன.
அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பெர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். லண்டனில் இந்தியாவுக்கு எதிராக ராகுல்காந்தி பேசியதாகக் கூறி, ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளும் கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எதிர்க்கட்சிகள், ஆளுங்கட்சி அமளியால் வரும் திங்கள்கிழமை (பிப்ரவரி 20) காலை 11 மணி வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்படுகின்றன.
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அமைக்கக் கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தில் ராகுல்காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்று முழக்கமிட்டு வருகின்றனர்.