கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் மொத்த பாதிப்பில் தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் மட்டும் 86.37 சதவீதம் தொற்று ஏற்பட்டுள்ளது
தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாநில அரசு மாவட்ட வாரியாக தொடர்ந்து கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, குஜராத் மற்றும் மராட்டிய மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த வகையில், தமிழ்நாடு அரசுக்கு வந்த கடிதத்தில் இந்தியாவில் கொரோனா தொற்று உறுதியாகும் சராசரி சதவீதத்தை விட தமிழ்நாட்டில் பரவல் என்பது அதிகரித்துள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் கடந்த மார்ச் 8-ந்தேதி வரை 2,082 ஆக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு, மார்ச் 15-ந்தேதியன்று 3,264 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், மாநில அரசு மாவட்ட வாரியாக தொடர்ந்துக் கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் மொத்த பாதிப்பில் தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் மட்டும் 86.37 சதவீதம் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே கொரோனா பரவல் அதிகரிக்காமல் இருப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பின்பற்ற வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக மாநில அரசுகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும், பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும், தடுப்பூசி போடப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை மாநில அரசுக்கு வழங்கியுள்ளது.